Nov 23, 2011

தினமணியில் நேற்று வெளியான டேம் 999 என்ற படம் குறித்த செய்தி இன்று நாடாளுமன்றத்தை உலுக்கியது



தினமணியில் நேற்று வெளியான டேம் 999 என்ற படம் குறித்த செய்தி இன்று நாடாளுமன்றத்தை உலுக்கியது
முல்லைப் பெரியாறு அணை உடைவது போலவும் அதனால் லட்சக்கணக்கான மக்கள் மடிவது போலவும் கணினி வரைகலை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட டேம் 999 என்ற ஆங்கிலப் படம் குறித்து தினமணியில் நேற்று செய்தி வெளியானது. இதை அடுத்து இந்தப் படம், ஒட்டுமொத்த தமிழர்களையும் அச்சப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தில் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. அரசியல்
ரீதியாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேரள அரசின் உதவியோடு கேரளத்தைச் சேர்ந்த இயக்குநரால் வேண்டுமென்றே தமிழக நலனுக்கு எதிராக பிரசாரம் செய்வதற்காக எடுக்கப்பட்டதாக தமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த அணை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், மக்களை அச்சப்படுத்தி வழக்கை திசை திருப்ப கேரள அரசே மேற்கொண்ட முயற்சி என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பப்போவதாக திமுக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று நாடாளுமன்றத்தில் அவை அலுவல்களுக்கு நடுவே, இருதரப்பு தமிழக எம்.பிக்களும் கேரள அரசின் செயலைக் கண்டித்தும், இந்தப் படத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். மேலும், தங்கள் கைகளில் தினமணி நாளிதழை தூக்கிப் பிடித்தவாறு அவையில் காட்டி, அரசுக்கு எதிராக தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதனால் அவையில் பரபரப்பு நிலவியது. 

No comments: