Dec 7, 2011

தமிழக - கேரள எல்லையில் அய்யப்ப பக்தர்கள் தவிப்பு: பெரியாறு அணை விவகாரத்தால் மோதல் முற்றுகிறது


முல்லைப் பெரியாறு பிரச்னையால், தமிழகம் - கேரள எல்லையில், இரண்டாவது நாளாக பதட்டம் நீடிக்கிறது. கம்பம் மெட்டு பகுதியில், 200 தமிழக ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டன. பெரியாறு அணை விவகாரத்தால், தமிழக ஐயப்ப பக்தர்கள், பெரும் பாதிப்புக்கும் தவிப்புக்கும் உள்ளாகியுள்ளனர்.

முல்லைப் பெரியாறு பிரச்னையில், கேரள கட்சிகளின் அடாவடி செயல்களால், தமிழகத்தின் எல்லையோரப்பகுதிகளான தேனி, கம்பம், கூடலூர், போடியில் மக்கள் கிளர்ந்து எழுந்தனர். ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். கேரள முதல்வரின் உருவ பொம்மைகளை எரித்தனர். வாகனப்போக்குவரத்தை முழுமையாக, நேற்று முன்தினம் தடுத்து நிறுத்தினர். கம்பத்தில் கடையடைப்பு நடத்தி, உம்மன் சாண்டி உருவ பொம்மைகளை எரித்தனர்
. வன்முறைச் சம்பவங்களும் அரங் கேறின. கேரளாவில் ஏலத் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்ற தமிழக தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். 500 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இதுகுறித்து அறிந்த தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குபின், நேற்று அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 
போலீஸ் ரோந்து: இரு மாநில எல்லையில் பதட்டம் தொடர்வதால், தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ்தாஸ் தலைமையில் திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து போலீசாரும், தமிழ்நாடு சிறப்பு பட்டாலியன் படை போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர். 25க்கும் மேற்பட்ட ரோந்து வாகனங்களில் போலீசார் சுற்றி வருகின்றனர். நேற்று இரண்டாவது நாளாக, தமிழக பகுதிகளில் போராட்டத்தின் தீவிரம் நீடித்தது. கம்பத்தில், கடைகள் அடைக்கப்பட்டன. தேவாரம், சின்னமனூர், பாளையம், பெரியகுளம் உட்பட பல பகுதிகளில், கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இதனால், கம்பம் உட்பட பல பகுதிகள் வெறிச்சோடின. கூடலூரிலும் கடைகள் அடைக்கப்பட்டன. கம்பம், கூடலூர், போடியில் இருந்து கேரளத்திற்குச் சென்ற வாகனங்களையும் மக்கள் அனுமதிக்கவில்லை. போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. 

காய்கறிகள் தேக்கம்: இந்த பதட்டத்தின் எதிரொலியாக நேற்று காலை, கம்பம் வாரச்சந்தையில் காய்கறிகள் விற்பனை மந்தமாக இருந்தது. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் தேங்கியுள்ளன. கேரளாவில் இருந்து கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகள் வரவில்லை. இதே போல, உழவர் சந்தையிலும் பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ள காய்கறிகள் தேங்கியுள்ளன. 

200 ஜீப்புகள் சேதம்: அதேசமயம், தமிழகத்தில் இருந்து ஏலத்தோட்டங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற 1,000 ஜீப்புகளில், 200க்கும் மேற்பட்டஜீப்புகளை புத்தடி, மந்திப்பாறை, கம்பமெட்டு பகுதிகளில் நேற்று மாலை, கேரள போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். நடுரோட்டில், 20க்கும் மேற்பட்ட ஜீப்புகளை கவிழ்த்து சேதப்படுத்தினர். கம்பமெட்டு போலீஸ் ஸ்டேஷன் முன், நாராயணத்தேவன் பட்டியைச் சேர்ந்தவரின் சுமோ காருக்கு தீ வைக்கப்பட்டது. இதில், கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. போலீசார் அதை வேடிக்கை பார்த்தனர். இதை யடுத்து, கம்பமெட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கம்பமெட்டில் நெடுங்கண்டம் ரோட்டில் உள்ள 50க்கும் மேற்பட்ட தமிழர்களின் வீடுகள் மீது, கேரளகும்பல் தாக்குதல் நடத்தியது.

ஐயப்ப பக்தர்கள் அவதி: குமுளி பகுதி வழியாக சபரிமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஐயப்ப பக்தர்களின் வாகனங்களை, நேற்று முன்தினம் இரவு சிலர் தடுத்து நிறுத்தி, அதில் பயணம் செய்த ஐயப்பபக்தர்களை வாகனங்களில் இருந்து இறக்கி, ஓட ஓட விரட்டி தாக்கினர். மேலும், அங்கிருந்த தமிழர்களின் ஓட்டல்கள், கடைகள் ஆகியவற்றை உருட்டுக் கட்டையால் தாக்கி சேதப்படுத்தினர். சில தினங்களாக நடந்து வரும் இக்கொடுமையால் அச்சமடைந்த வியாபாரிகள், தங்களது கடைகளை மூடினர்.

ஐயப்ப பக்தர்கள் தொடர்ந்து அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், உத்தமபாளையம் லோயர் கேம்ப்பகுதியில் இருந்து, கூடலூர் வரை 11 கி.மீ., தூரத்திற்கு, வாகனங்கள் சாலையோரமாக நிறுத்தப்பட்டன. 

அவற்றில் பயணித்த பக்தர்கள், உணவு கூட கிடைக்காமல் அவதியுற்றனர். சபரிமலை சீசன் உச்ச கட்டத்தை அடைந்த நேரத்தில், இதுவரை இல்லாத வகையில், பக்தர்கள் தங்கள் பயணத்தை நிறைவேற்ற முடியாத நிலை காணப்படுகிறது.
செங்கோட்டை வழியாக பயணம்?: தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள், குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு வழியாக, சபரிமலைக்கு செல்ல முடியவில்லை. கூடலூர் வரை வந்த நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்களை, கூடல் சுந்தர வேலவர் கோவில் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கூடலூர் வரை வந்த பக்தர்கள் திரும்பி, மாற்றுப்பாதையான செங்கோட்டை வழியாக செல்லலாம் என திட்டமிட்டு உள்ளனர். 

பல கி.மீ., தூரம் சுற்றி, செங்கோட்டை வழியாக செல்லும் போது, அங்கும் பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்வது என, பக்தர்கள் புலம்பி வருகின்றனர். இதனால், சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் பயணம், தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து, புதுச்சேரி ராஜா என்ற பக்தர் கூறுகையில், "தமிழர்களுக்கு எதிராக, கேரளாவில் நடந்து வரும் செயல் கண்டிக்கத்தக்கது. தமிழருக்கு ஆதரவு தெரிவித்து, இந்தாண்டு கேரளாவில் உள்ள சபரிமலைக்கு செல்லாமல், புதுச்சேரியில் உள்ள ஐயப்பன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி, எங்களது விரதத்தை முடிக்க உள்ளோம். 

இன்று மாலை ஊருக்கு திரும்ப உள்ளோம்' என்றார். ஆனால், எத்தனை நாட்களானாலும், சபரிமலைக்கு சென்று விட வேண்டும் என்ற முடிவில் உள்ளதாக பலர் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்