Dec 4, 2011

தாக்கினால், துவம்சம்தான் பாகிஸ்தானுக்கு அமெரிக்க ராணுவம் எச்சரிக்கை


நேட்டோ படைகள் நடத்திய வான் தாக்குதல் சம்பவத்துக்காக பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. பாகிஸ்தானின் இறையாண்மையை மதிப்பதாகவும், தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் மன்னிப்பு கேட்பது என்பதற்கே இடமில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறினார்.

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இது பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க விமான தளத்தை உடனடியாக காலி செய்யுமாறு பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உறுதிபட தெரிவித்துவிட்டனர். இச்சம்பவம் இரு நாடுகளிடையே பெரும் உரசலை ஏற்படுத்திவிட்டது.



இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டோனர், என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானுடன் வலுவான உறவை வைத்துக் கொள்ளவே அமெரிக்க விரும்புகிறது. இந்தச் சம்பவத்துக்காக ஆழ்ந்த இரங்கல், வருத்தத்தை அமெரிக்க அரசு தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் நடந்த உடனேயே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரைத் தொடர்பு கொண்டு பேசியதையும் டோனர் சுட்டிக் காட்டினார். இதிலிருந்தே இந்தச் சம்பவத்தை அமெரிக்கா எந்த அளவுக்கு கடுமையானதாகக் கருதுகிறது என்பதை உணர

முடியும்.

உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வதோடு எதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் எப்போதும் ஏற்படாதவகையில் தடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

நேட்டோ தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் குறித்து ஜெர்மனியின் பான் நகரில் நடைபெறும் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் பான் கி மூன் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் 85 நாடுகள் பங்கேற்கின்றன. 15 சர்வதேச அமைப்புகள் இதில் பங்கேற்க உள்ளன. இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லையெனில் அது மன்னிக்க முடியாத குற்றமாகும். இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஆப்கன் குறித்த கூட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்க வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.

பாகிஸ்தான் அதிகாரிகளிடமும், ஆட்சியாளர்களிடமும் தொடர்ந்து பேசி வருகிறோம். பாகிஸ்தானின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கிறது என்றும், இரு நாடுகளிடையிலான உறவை மதித்து நடந்து கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் டோனர் கூறினார்.

பயங்கரவாதிகளை எதிர்கொள்வதில் இரு நாடுகளும் இணைந்து பல்வேறு தருணங்களில் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு சூழ்நிலையை திறமையாக சமாளித்துள்ளோம். இப்போது நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை முடிந்தபிறகே என்ன நடந்தது என்பது தெரிய வரும் என்றார் டோனர்.



1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.