Dec 4, 2011

ஹிலாரி கிளிண்டனுக்கு துணை அதிபர் பதவி இல்லை. ஒபாமா


அமெரிக்காவில் அடுத்த ஆண்டு  நடைபெற உள்ள தேர்தலில் அதிபர் பதவிக்கு பராக் ஒபாமாவும், துணை அதிபராக ஜோ பிடெனும் களமிறங்குவார்கள். இத்தகவலை வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள ஹிலாரி கிளிண்டன், துணை அதிபராக களமிறக்கப்படுவார் என முன்னர் யூகங்கள் வெளியாயின. ஆனால் அவற்றையெல்லாம் பொய்யாக்கும் வகையில் இப்போது அதிபராக உள்ள ஒபாமாவும், துணை அதிபராக உள்ள ஜோ பிடெனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


வெள்ளை மாளிகையில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் பலரும் இதுபோன்று தகவல்களைப் பரப்புகின்றனர் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலர் ஜே கார்னி தெரிவித்தார்.

2012 தேர்தலில் ஒபாமா, ஜோ பிடென் ஆகியோர் முறையே அதிபர், துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு 2013 ஜனவரியில் பதவியேற்பது நிச்சயம் என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

கிளிண்டன் பாராட்டு: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பராக் ஒபாமா நிச்சயம் வெற்றி பெறுவார் என்று முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தெரிவித்துள்ளார். ஒபாமாவின் எரிசக்தி கொள்கை மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்கச் செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகள் சிறந்த பலனை அளித்து வருவதாகவும் அவர் கூறினார். துணை அதிபர் பதவிக்கு ஹிலாரி கிளிண்டன் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை என்று திட்டவட்டமாக தெரிந்த நிலையிலும் கிளிண்டன் இக்கருத்தைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  

No comments: