Dec 11, 2011

பெரியாறு அணையை நோக்கி தமிழக மக்கள்! :எல்லையில் பதட்டம் (காணொளி)







தேனி மாவட்டம் கம்பம், கூடலூர் பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று ஐந்து இடங்களில், போலீஸ் ஏற்படுத்திய தடைகளை மீறி குமுளிக்குள் அணிவகுத்தனர். "கேரளா செல்லும் 13 பாதைகளையும் அடைக்க வேண்டும்; தமிழக சட்டசபையை உடனடியாக கூட்டி இதற்காக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என வலியுறுத்தி போராட்டம் நடத்துவதால், எல்லையில் பெரும் பதட்டம் உருவாகி உள்ளது.


பெரியாறு அணை பிரச்னையில், கடந்த ஒரு வாரமாக, தேனி மாவட்டம், கம்பம், கூடலூர் பகுதிகளில், பெரும் போராட்டம் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் போடி மெட்டு, கம்பம் மெட்டு,குமுளி வழியாக போக்குவரத்து முழுமையாக தடைபட்டுள்ளது.சபரிமலை சென்று விட்டு, திரும்பும் தமிழக பக்தர்கள் மீது, கேரள கும்பல் தாக்குதல் நடத்தி வருகிறது. இது தமிழக மக்களை மேலும் கொதிப்படைய செய்துள்ளது.இந்நிலையில், கேரள சட்டசபை விசேஷ கூட்டத்தை கூட்டி, "பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும்; தற்போதைய நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றியது. கேரள அரசின் இந்த செயல் தமிழக மக்களை மேலும் கொந்தளிக்க வைத்து விட்டது.

50 ஆயிரம் பேர் திரண்டனர் : கம்பம், கூடலூர், ராயப்பன்பட்டி, சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி உட்பட 26 கி.மீ., சுற்றளவில் இருந்து, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று காலை கூடலூரில் திரண்டனர். இவர்களில் பாதி பேர் பெண்கள். இவர்கள் அனைவரும், கேரள எல்லையான குமுளியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.பாதுகாப்பு பணியில் இருந்த 1,500 போலீசார் தடுக்க முயற்சி செய்தும், 50 ஆயிரம் மக்கள் திரண்டதால், தடுக்க முடியாமல் தவித்தனர். கூடலூர், பகவதியம்மன் கோவில், லோயர்கேம்ப் பகுதியில் இரண்டு இடங்கள் என ஐந்து இடங்களில் போலீசார் தடைகளை ஏற்படுத்தினர். போலீசாரின் தடைகளை தகர்த்த மக்கள், குமுளியின் தமிழக பகுதிக்குள் நுழைந்தனர். தமிழக அரசின் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பாக ஒன்று திரண்டனர்.அங்கு தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ் தாஸ்,தேனி கலெக்டர் பழனிசாமி ஆகியோர் பேச்சு நடத்தினர்.

"கேரளா செல்லும் 13 பாதைகளையும் உடனே சீல் வைத்து மூட வேண்டும்; கேரளாவிற்கு எதிரானபொருளாதார முற்றுகையை உடனே துவக்க வேண்டும்;தமிழக சட்டசபையின் விசேஷ கூட்டத்தை கூட்டி, அணை நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்' என, மக்கள் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.

தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ் தாஸ், இந்த கோரிக்கைகளை உடனே அரசுக்கு தெரிவிப்பதாகவும், மக்கள் கோரிக்கையை அமல்படுத்தும் வகையில், குமுளி பாதையை உடனே மூடுவதாகவும் தெரிவித்தார். 

கலெக்டர் பழனிசாமி, "அரிசி, பால், காய்கறி, மணல் உட்பட எதையும் நாங்கள் கேரளாவிற்கு அனுப்ப மாட்டோம்; தடை விதித்து விடுகிறோம். அரசின் தடைக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்தும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர். பின், தொடர்ந்து கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

குமுளியில் கடைகள் அடைப்பு ரோடுகள் வெறிச்சோடின:குமுளியில் தமிழக குமுளி, கேரள குமுளி என இரண்டு குமுளிகள் உள்ளன. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தமிழக குமுளியில் கூடினர். மக்கள் கூடியிருந்த இடத்தை அடுத்து, குமுளி தமிழக பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இதை ஒட்டி, குமுளி கேரள பஸ் ஸ்டாண்ட் உள்ளது. மக்கள் கூடியிருந்த இடத்தில் இருந்து, இரண்டு நிமிடத்திற்குள், கேரள குமுளிக்குள் புகுந்து விட முடியும்.கேரள குமுளியில் இருந்த மக்கள், தமிழக மக்கள் திரண்டு வந்து நிற்பதை, வாசலிலும், தங்கள் வீட்டு மாடியிலும் நின்று வேடிக்கை பார்த்தனர். கேரள தரப்பில், இடுக்கி எஸ்.பி., ஜார்ஜ் வர்க்கீஸ் தலைமையில்,100 போலீசார் மட்டுமே எல்லையில்நின்றிருந்தனர்.மக்கள் குமுளிக்குள் புகுந்தால், விபரீதம் ஏற்பட்டு விடும் என, பயந்த கேரள வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டனர். மக்கள் வீடுகளை பூட்டி விட்டனர். மக்கள் திரண்ட ஓரிரு நிமிடத்தில், கேரள குமுளி முழுக்க வெறிச்சோடி விட்டது.

திரண்டு எழுந்த திராட்சை விவசாயிகள் : கம்பம்: நேற்று காலை கம்பம் அருகே உள்ள, சுருளிப்பட்டி கிராமத்தில் இருந்து, திராட்சை விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், 3,000 பேர், ஊர்வலமாக புறப்பட்டனர். 500 க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஊர்வலத்தில் வந்தனர். 

சுருளிப்பட்டியில் இருந்து நடந்தே வந்த இவர்களை கம்பம், வ.உ.சி., திடலில் போலீசார், மறித்தனர். போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி, பொதுமக்கள் கூட்டம் குமுளி ரோட்டில் சென்றது. பின்னர் கம்பம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த, 15 ஆயிரம் பேர், நடந்தே லோயர்கேம்ப் சென்று, அங்கு கூடியிருந்த கூடலூர் மக்களுடன் சேர்ந்து கொண்டனர்.

No comments: