Dec 26, 2012

குஜராத் முதல்வராக 4வது முறையாக பதவியேற்றார் நரேந்திர மோடி.விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா !

குஜராத் மாநிலத்தின் முதல்வராக 4வது முறையாக பதவியேற்றார் நரேந்திர மோடி. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 182 இடங்களில் 115ஐ கைப்பற்றி ஆளும் பா.ஜ., தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து சாதனை படைத்தது. குஜராத் சட்டசபை பா.ஜ., தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, குஜராத் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று காலை நடந்தது. இதற்காக ஆமதாபாத்தில் மிகப் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ‌‌மொத்தம் 1 லட்சம் பேர் அமரும் வசதி கொண்ட ஆமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பதவியேற்பு விழாவையொட்டி, மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். இதற்காக அவர் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் ஆமதாபாத் சென்றடைந்தார். சிவசேனா கட்சித்தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர நவநிர்மாண் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, தேசிய தலைவர் நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, ராஜ்நாத் சிங், வெங்கய்யா நாயுடு, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், ம.பி., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். நரேந்திர மோடிக்கு, கவர்னர் கமலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில், இன்று காலை தனது டுவிட்டர் இணையதளத்தின் வாயிலாக தொண்டர்களிடையே உரையாடிய மோடி, எதிர்கால இந்தியா சிறப்பாக அமைவதற்கான ரகசியம், அதன் ஒருங்கிணைப்பு மற்றும் உறுதிப்பாட்டிலேயே உள்ளதாக தெரிவித்துள்ளார். மோடியின் இந்த பேச்சு, தேசிய அளவில் அவர் தன்னை நிலைநிறுத்துவதற்கான வழிகளை நோக்கி செல்வதாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

No comments: