Dec 28, 2012

மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ.50 லட்சம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் டிசம்பர் மாத உண்டியல் வருவாய் ரூ.50 லட்சம் கிடைத்துள்ளது. கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெயராமன் தலைமையில் கோயில் உண்டியல்கள், உபகோயில்களின் உண்டியல்களில் உள்ள காணிக்கைகளை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு உண்டியல் மூலம் ரூ. 50 லட்சமும், அன்னதான உண்டியல் மூலம் ரூ.90 ஆயிரம் கிடைத்துள்ளது. கோயில் உண்டியல்களில் பக்தர்கள் தாலிச் சங்கிலி, தங்கக்காசுகள் காணிக்கையாகவும் அளித்துள்ளனர். அதன்படி 360 கிராம் தங்கமும், 450 கிராம் வெள்ளிப் பொருள்களும் கிடைத்துள்ளன. உபகோயிலான தெப்பக்குளம் அருள்மிகு மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 2.40 லட்சமும், அன்னதான உண்டியல் மூலம் ரூ.36 ஆயிரமும்,செல்லூர் திருவாப்புடை யார் கோயில் அன்னதான உண்டியல் மூலம் ரூ.26 ஆயிரம் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். வருண பாராயணம் மழைவேண்டி, மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த 12-ம் தேதி சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டபம் அருகே வருணபாராயண சிறப்பு யாகம் தொடங்கியது. இதில் 7 நதிகளது புனித நீர் அடங்கிய கலசங்கள் யாகசாலையில் பூஜை செய்யப்பட்டு, வேதபாராயணம் முழங்க, பொற்றாமரைக் குளத்தில் புனிதநீர் கலக்கப்பட்டது. வருணபாராயண நிறைவு நிகழ்ச்சியானது புதன்கிழமை நடைபெற்றது. இதில் ,பத்துக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு, நதிகளது புனிதநீருக்கு சிறப்புப் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த நீரானது பொற்றாமரைக்குளத்தில் கலக்கப்பட்டது. பாராயணத்தின் நிறைவு நாளான புதன்கிழமை மாலை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றுடன் லேசான மழையும் பெய்தது பக்தர்களை பரவசப்படுத்தியது.

No comments: