Jun 1, 2012

சதுரகிரி மலை சந்தனமகாலிங்கம் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

சதுரகிரி மலை சந்தனமகாலிங்கம் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது சதுரகிரி மலை. இங்கு சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இரு வேறு மலைகளில் எதிர் எதிரே அமைந்துள்ள இக்கோயில்களில் ,சுயம்புவாக எழுந்தருளியவர் சுந்தரமகாலிங்கம், அகத்தியர் முதலான 18 சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் சந்தன மகாலிங்கம். பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோயில்களில், கடந்த 2000ல் புதிதாக கோபுரங்கள் கட்டப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டன. தற்போது பக்தர்கள் அதிகமாக வந்து செல்வதால், அவர்களுக்கு பல்வேறு வசதிகளுடன், சந்தன மகாலிங்கம் , பாலமுருகன் , சந்தன மகாதேவி கோயில் கோபுரங்களும் புனரமைக்கப்பட்டுள்ளன.இதை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான யாக சாலை பூஜைகள், மே 28ல் துவங்கின. மூன்றாம் நாளான நேற்று நடந்த மூன்றாம் கால பூஜையின் முடிவில், கோயில் தலைமை பூசாரி சுப்புராம் சுவாமி தலைமையில், சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்தனர். அபிஷேக நீரும் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அகத்தியர் அறக்கட்டளை சார்பில் மூன்று நாட்களாக தொடர் அன்னதானமும், அருள்மிகு சுந்தரமகாலிங்கம் யாத்திரியர்கள் அறக்கட்டளை சார்பில் பிரசாதமும் வழங்கப்பட்டது.

May 29, 2012

நடக்க நடக்க, "ஆயில்' குறையும்! ஆயுள் கூடும்.!!


எரிபொருளை மிச்சப்படுத்துவதால் என்ன பலன்? மிச்சமான எரிபொருளை மட்டும் வைத்து, சென்னையிலிருந்து மதுரை வரை சென்றுவிட முடியாது தான். அதேசமயம், கூட்டம் அதிகமிருக்கும் "பங்க்'கைத் தவிர்த்து, அடுத்த "பங்க்' வரையாவது செல்ல முடியும். இல்லாவிட்டால், எந்த வண்டியாக இருந்தாலும், தள்ளு வண்டியாக மாறிவிடும்.
எரிபொருள் சிக்கனத்துக்கான சில எளிய வழிகள் இதோ:

* முதலில், வாகனத்தை, "சர்வீஸ்' செய்யுங்கள். எண்ணெய் கசிவு நீக்குங்கள். "மைலேஜ்' பரிசோதனை செய்யுங்கள்.
* சிக்னலில் 30 வினாடிக்கு மேல் நிற்க வேண்டியிருந்தால், வண்டியை அணைத்துவிடுங்கள்.
* தேவைப்படும் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில், "பிரேக்' பிடிக்காதீர்கள்.
* எந்நேரமும், "கிளட்ச்'சில் கால் / கை வைக்காதீர்கள்.
* குறிப்பிட்ட வேகத்துக்கு எந்த, "கியரோ' அந்த வேகத்தில் அந்த, "கியரை' பயன்படுத்துங்கள்.
* இரு சக்கர வாகனங்களை சாய்வாக நிறுத்தாதீர்கள்.
* எந்தப் பயணம் மேற்கொள்ளும் முன்பும், இது தேவை தானா என ஒரு முறை சிந்தியுங்கள். முடிந்தால், தொலைபேசியிலேயே வேலையை முடிக்கப் பாருங்கள்.
* குழுவாகச் செல்லும்போது மட்டும் படகு கார்களைப் பயன்படுத்துங்கள்.
* தனியாகச் செல்ல நேர்ந்தால், இரு சக்கர வாகனங்கள் உத்தமம்.
* எவ்வளவு முடியுமோ அவ்வளவு, பஸ், ரயில், ஷேர் ஆட்டோ போன்ற பொது வாகனங்களைப் பயன்படுத்துங்கள்.* ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான தூரங்களுக்கு, நடந்தே செல்லப் பழகுங்கள். நடக்க நடக்க, "ஆயில்' குறையும்; ஆயுள் கூடும்.
நன்றி தினமலர்