Dec 6, 2012

வீட்டு உபயோகத்திற்கு 55 ஆயிரம் ரூபாயில் காற்றாலை

வீட்டு உபயோகத்திற்கு ஏற்ப, 55 ஆயிரம் ரூபாயில், செங்குத்தான காற்றாலைகளை நிறுவும் நிறுவனங்கள் சந்தையில் நுழைந்துள்ளன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், காற்றாலை மின் உற்பத்திக்கு, முக்கிய பங்கு அளிக்கப்படுகிறது. இதுவரை, வர்த்தக உபயோகத்திற்கு மட்டுமே காற்றாலைகள் அமைக்கப்பட்டன.அதிகரிக்கும் மின்வெட்டை மனதில் கொண்டு, வீட்டு உபயோகத்திற்கான சிறிய காற்றாலைகள் வடிவமைப்பில் நிறுவனங்கள் இறங்கி உள்ளன.வீட்டு உபயோகத்திற்கான காற்றாலைகளை வடிவமைத்தாலும், அவை, நடுத்தர மக்கள் வாங்கும் விலையில் இல்லை என்ற குறை இருந்தது.தற்போது, நடுத்தர மக்களின் மனக்குறையை போக்கும் விதமாக, சந்தையில் சிறிய காற்றாலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.

சிறிய காற்றாலை வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள, "மெக்லின்ஸ் இந்தியா' நிறுவனத்தின் இயக்குனர் சிவசங்கர் கூறியதாவது:வர்த்தக பயன்பாட்டுக்கான காற்றாலைகளை நிறுவ, அதிக முதலீடு தேவைப்படும். இவற்றின் பிளேடுகள் அளவில் பெரியவை; இதை வீடுகளில் அமைக்க முடியாது.தற்போது, காற்றாலைகளில் பொருத்தப்படும் வட்ட வடிவிலான பிளேடுகள், சில நேரங்களில் கழன்று, விபத்தை ஏற்படுத்தும்.இப்பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில், வீட்டு உபயோகத்திற்காக சிறிய காற்றாலையை, வடிவமைத்து உள்ளோம். நடுத்தர மக்களும், இதை எளிதில் வாங்கி நிறுவ முடியும்; 55 ஆயிரம் ரூபாயில் அமைத்து தருகிறோம். இதற்கு தேவைப்படும் இடம் மிகக் குறைவு.

விபத்தை ஏற்படுத்தாத வகையில், பிளேடுகள் செங்குத்தான வடிவில் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த முறையில் அமைக்கப்படும் ஒரு காற்றாலை மூலம், ஒரு நாளுக்கு அதிகபட்Œமாக, மூன்று யூனிட் மின் உற்பத்தி செய்யப்படும்.சென்னை பள்ளிக்கரணையில் உள்ள காற்று சக்தி தொழில்நுட்ப மையம், காற்று அதிகம் வீசும் மாவட்டங்கள் எவை என்பதை பட்டியலிட்டுள்ளது. அந்த மாவட்டங்களில், இந்த சிறிய காற்றாலைகளை நிறுவி, காற்று வீசும் பருவ காலத்தில், மின்சாரத்தை பெற்று பயனடைய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
தென் மாவட்டங்களுக்கு "லக்'


:வீடுகளுக்கு மரபுசாரா மின் உற்பத்தியை அமைக்கும் போது, "சோலார்' மற்றும் காற்றாலை ஆகிய இரண்டையும் சேர்த்து அமைப்பதே சிறந்தது என்று, அத்துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறுகின்றனர்.இருப்பினும், காற்று அதிகம் வீசும் மாவட்டங்களான, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்ட மக்களுக்கும், திருப்பூர், கோவை ஆகிய மேற்கு மாவட்ட மக்களுக்கும், சிறிய காற்றாலைகள் வரவால், "லக்' அடித்துள்ளது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Dec 5, 2012

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம்: முதல்வர் ஜெயலலிதா

டெல்டா மாவட்டங்களில் 15 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர், போதிய தண்ணீர் இல்லாததால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் பம்பு செட்டுகள் மூலம் பயிர்களை காப்பாற்ற வசதியாக, காவிரி டெல்டா பகுதிகளில் பிப்ரவரி மாதம் வரை மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
‘காலையில் 6 மணி நேரமும், இரவில் 6 மணி நேரமும் இந்த மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மேலும் சம்பாவை காப்பாற்றவும், பாதிப்பு ஏற்பட்டால் போதிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டீசல் பம்பு செட்டுகளை இயக்குவதற்கு ஏக்கருக்கு 600 ரூபாய் மானியம் அளிக்கப்படும். எனவே, விவசாயிகள் தன்னம்பிக்கை இழக்க வேண்டாம்’, என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு, வினாடிக்கு 1000 கன அடியில் இருந்து 4000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 50.95 அடியாகும், தற்போது அணையில் 18415 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3158 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை முதல் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டால் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

Dec 4, 2012

அ.தி.மு.க., வில் நாஞ்சில் சம்பத்


ம.தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த  நாஞ்சில் சம்பத் இன்று காலையில் முதல்வர் ஜெ.,வை சந்தித்து அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். இவர் தி.மு.க.,பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க.,வில் இன்று சேர்ந்தார். இந்த செய்தி ம.தி.மு.க., தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.  ம.தி.மு.க.,வில் வைகோவுக்கு இணையாக பெரும் திரளாக நாஞ்சில் சம்பத் பேச்சை கேட்க கூட்டம் சேரும். கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக கட்சி பொதுச்செயலர் வைகோவுடன் மனக்கசப்பில் இருந்து வந்த சம்பத் கட்சிப்பணியில் இருந்து விலகி இருந்தார். பிரசாரத்திற்கு எங்குமே செல்லவில்லை. அ.தி.மு.க., பொதுசெயலரை நேரில் சந்தித்து தன்னை அ.தி.மு.க.,வில் இணைத்து கொண்டார். இவரது விலகல் ம.தி.மு.க.,வுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.
அ.தி.மு.க., வில் உயர்ந்த பதவி :
இன்று காலையில் அ.தி.மு.க.,வில் இணைந்ததும் சம்பத்துக்கு இந்த கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாநில அரசின் சாதனை விளக்க கூட்டங்களில் பங்கேற்க நாஞ்சில் சம்பத் தனது பிரசார பயணத்தை விரைவில் துவங்குவார் என கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.