Feb 19, 2013

புலித்தடம் தேடி.தமிழ் பிரபாகரன்- பாகம் 13



சிரித்துக்கொண்டே மரணத்தை வென்றவன். அப்படி வென்றவனின் நினைவு ஸ்தூபி (யாழ்ப்பாண நல்லூர் கோயில் அருகே) இடிக்கப்பட்டது என நான் தமிழ்நாட்டில் வந்திறங்கிய டிசம்பர் 7-ம் தேதி செய்தி கிடைத்தது. . அந்தச் செய்தி 2010-ல் திலீபன் சிலை இடிக்கப்பட்டபோது ஈழநாதம் நாளிதழ் வெளியிட்ட கருத்தை மனதில் நினைவு கூர்ந்தது.
நம்புங்கள்... நல்லூர் கோயிலும் நாளை இடிக்கப்படும், நம்புங்கள்... சங்கிலியன் சிலை தூக்கி எறியப்படும், நம்புங்கள்... நாளை மீண்டும் நூலகம் எரிக்கப்​படும்.
மாவீரர் துயிலும் இல்லங்களை இடிக்கும் போது தான் பேசாமல் இருந்தோம். சரி, அவர்கள் பாணியில் சொன்னால் வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள். ஆனால், தியாக தீபம் திலீபனும் அப்படியா?
இவ்வளவு காலமும் இடிக்கப்படாமல் இருந்த தியாக தீபத்தின் சிலை ஏன் இப்போது இடிக்கப்பட்டது?'' என்ற அந்தக் கருத்து என்னை வாட்டியது.
அமைதி வழியானாலும் ஆயுத வழியானாலும் எந்த வழியானாலும் தமிழர்கள் எதற்காகவும் போராடக் கூடாது என்ற நினைப்பைத்தான், இந்த இடிப்பு சம்பவங்கள் குறிப்பிடுகின்றன.
மன்னாரில் இருந்து துக்கத்தோடு யாழ்ப்​பாணத்துக்குச் சென்றதும், திலீபன் காலத்​துக்கு முன்னிருந்து உள்ள ஒரு மனிதரைச் சந்தித்தேன்.
அந்த மனிதர் உண்மையில் இன்றையத் தமிழ் இளைஞர்களுக்கு எல்லாம் தேவையான ஒருவர். இராணுவத்​தின் அதிகாரங்கள் அவரையும் அடக்கி​ வைத்துள்ளது.
யாழ்ப்பாண நல்லூர் கோயில் அருகே உண்ணாநிலை இருந்த திலீபனின் நினைவுகளைப் பகிர்ந்தார்.
உலகின் எந்தவொரு விடுதலைப் போராட்டத்திலும் அரசியல் போராட்​டத்திலும் 'ஒற்றை மனிதனின் உண்ணாநிலை’ நடந்தது இல்லை.
ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக அகிம்சையைப் பிரயோகித்த காந்தியே, நீரோடும் பாலோடும்தான் உண்ணாவிரதம் இருந்தார்.
ஒரு சொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல், 265 மணி நேரம் (12 நாட்கள்) உண்ணாவிரதம். 'என் சுயநினைவை இழந்தால்​கூட குளுக்கோஸ், தண்ணீரைத் தந்துவிடாதீர்கள்’ என்று தோழர்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்ட திலீபனின் உயிர், செப்டம்பர் 26, 1987 காலை 10.48-க்கு பிரிந்தது. லட்சக்கணக்கான தமிழ் மக்களின் கண்ணீர் சிந்திய பாதைகளில் திலீபனின் மரணக் கோரிக்கைகள் புதைந்து போயின.
மருத்துவ​னான திலீபன் ஈழவர்கள் நெஞ்சில் உயிராய் பதிந்து​விட்டான். இந்தியாவோ இலங்கையோ, காந்தி வழியே இறந்த திலீபனுக்காக துளியும் வருந்தவில்லை.
இதற்கு முன் சென்னையில் பிரபாகரனும்கூட ஒரு முறை தகவல் தொடர்புக் கருவிகளைப் பறித்ததைக் கண்டித்து, நீர் அருந்தாத உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்தி இருந்தார்.
ஆயுதம் தாங்கிகளான இவர்களுக்கு அகிம்சை​யின் மீதும் தீராக் காதல் உண்டு என்பதை மெய்ப்பிக்கும் சாட்சியங்கள் அவை'' என நினைவூட்டினார்.
திலீபனின் உயிர் அணு அணுவாய் பிரிந்து​கொண்டு இருந்தபோது... நார்வே, ஸ்வீடன், இங்கி​லாந்து, அவுஸ்திரேலியா நாட்டுத் தூதுவர்கள் வந்து பார்த்துச் சென்றார்கள்.
ஆனால் இந்தியாவோ, அமைதிப் படையின் அதிகாரிகளையும் தூதுவர்​களையும் வைத்து மிரட்டிக்கொண்டு இருந்தது.
உண்ணாநிலை நடந்துகொண்டு இருந்த நேரத்தில் புலிகள் பிரதிநிதிகளைச் சந்தித்த இந்திய உதவி தூதர் நிருபம் சென், 'உண்ணாவிரதப் போராட்டங்களால் இந்தியாவை நிர்ப்பந்திக்க முடியாது’ என எச்சரித்தார்.
திலீபனின் ஐந்து கோரிக்கைகள்:

1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்​பட்டோர் விடுவிக்கப்பட வேண்டும்.

2. புனர்வாழ்வு என்று தமிழர் தாயகத்தில் நடத்தப்​படும் சிங்களக் குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை 'புனர்வாழ்வு’ என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
4. வட கிழக்கு மாகாணங்களில் போலீஸ் நிலையங்​கள் திறப்பதை உடனே நிறுத்த வேண்டும்.
5. இந்திய அமைதிப் படையின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோர்க்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் திரும்பப்பெற்று, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடி​கொண்டுள்ள இராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.
25 ஆண்டுகள் கடந்தும் திலீபன் வைத்த கோரிக்கைகள் இன்னும் பழைமையாகாமலே இருக்கிறது. புதிதாக எந்தக் கோரிக்கைகளையும் இந்தியா முன்வைக்கத் தேவை இல்லை. இதையே இப்போதும் முன்வைத்தாலே போதும்.
இந்தியாவின் உதவிகள்தான் இன்று இலங்கையை ஒரு இராணுவ நாடாக உருவாக்கி உள்ளது. அந்த விருட்சங்களே தமிழர் பகுதிகளில் உள்ள இராணுவ ஆக்கிரமிப்புகள்.
அதனால்தானே ராஜபக்ச வருகையின்போது பாதுகாப்புக்கு காவல்துறை, சிறப்புப் படை என 50 ஆயிரம் பேரை இந்தியா காவலுக்கு வைத்தது.
யாழ்ப்பாணத்தை விட்டு கிளிநொச்சி வழியே வவுனியாவுக்குச் சென்றேன். ஓமந்தையில் என் கடவுச்சீட்டு பதியப்பட்டது.
இன்றும் ஓமந்தை (முன்பு புலிகளின் எல்லைப் பகுதி) தமிழ் - சிங்களப் பகுதிகளைப் பிரித்துக் காட்டும் அடையாளமாகவே விளங்குகிறது.
அங்கு இராணுவத்திடம் சிங்களவர்​களுக்கும் தமிழர்களுக்கும் வேறு வேறு விதிகள். வவுனியாவை அடைந்ததும் ஓமந்தை பற்றி உள்ளூர் தோழரிடம் கேட்டேன்.
அவர் ''இங்க ஐ.சி. (அடையாள அட்டை) இல்லாம எங்கையும் நடந்து​கூட போக இயலாது. அப்படி இல்லாம இராணுவம் பிடிச்​சதுனா, சந்தேகப் பிரிவுலதான் போடுவினும். சிலமுறை அப்படித் தப்பிக்க காசு கொடுக்கக்கூட வேண்டியது இருக்கும்’ என்றார்.
தோழர் குறிப்பிடுவதுபோல சிங்கள இராணுவத்தில் உள்ள இடைநிலை ஆட்களுக்குத் தேவை, பணம்​தான். இதற்காகவே பலர் சந்தேக வழக்கில் கைதுசெய்யப்படுகின்றனர்.
நம்ம ஊரில் எப்படி கஞ்சா வைத்திருந்தான் என்று காவல்துறை கைது செய்யுமோ, அதுபோல் அங்கே 'வெடிமருந்து வைத்திருந்தான்’ என்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்வார்கள்.
பலரையும் மிரட்டுவது இந்தச் சட்டம்தான். ''ஐ.நா. சபையை நம்பித்தான் நாங்க இருக்கோம். எங்களுக்கு வேறு எந்த நம்பிக்கையும் இல்லை'' என்றும் அந்த மக்கள் சொல்கிறார்கள்.
2013 தொடக்கத்தில் ஐ.நா. எடுத்துள்ள ஒரு முடிவு மீண்டும் தமிழ் மக்களை சித்திரவதைக்குள் சிக்கவைக்கும் ஒரு முடிவாக உள்ளது.
ஐ.நா. எடுத்த அந்த முடிவு என்னவென்றால், 'இந்த வருடத் தொடக்கத்தில் இருந்து ஐ.நா. தனது பணிகளைக் குறைக்க முடிவெடுத்துள்ளதுடன், வருட இறுதிக்குள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுவது எனவும் திட்டமிட்டு உள்ளது’. இது அந்த மக்களுக்குத் தெரியாது.
'ஐ.நா-வின் மனித உரிமை சார்ந்த செயல்பாடுகளுக்கு இங்கு வேலை இல்லை’ என்றும், 'நிதிப் பற்றாக்குறைக் காரணங்களுக்காக வெளியேறப்போகிறது’ என்றும் பல காரணங்கள் கூறப்படுகின்றன.
ஆனால் உண்மையில், ஐ.நா-வின் மனித உரிமை சார்ந்த பணிகளுக்கு யாழ்ப்பாணத்தில் இன்னும் தேவை உள்ளது என்பதை மனித உரிமைப் பணியாளர் ஒருவர் என்னிடம் விளக்கினார்.
யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களில் இன்னும் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. உயர் பாதுகாப்பு வளையங்களாகவே உள்ள அந்தப் பகுதியில் உள்ள கண்ணி வெடிகளை அகற்ற இன்னும் ஐந்து வருடங்களாவது தேவைப்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் பணிகளே இன்னும் முடியாத நிலையில் ஐ.நா. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினால், கண்ணி வெடி அகற்றல் பணி பாதுகாப்புச் செயலகத்திடம் ஒப்படைக்கப்படும் என அறியப்படுகின்றது.
அரசின் கண்ணி வெடிகள் அகற்றல் நிறுவனமான 'டாஷ்’, இந்தப் பணியில் ஏற்கெனவே உள்ளது.
இந்தியாவைச் சார்ந்த 'சர்வத்ரா’வும் கண்ணி வெடிகள் அகற்றலில் ஈடுபடுகிறது. இதோடு மற்ற நாடுகளைச் சார்ந்த 'ஹலோ டிரஸ்ட்’ போன்ற அமைப்புகளும் இதில் ஈடுபடுகிறது.
ஐ.நா. வெளியேறிவிட்டால், இப்படியான பணிகளை மேற்பார்வை செய்வதற்குக்கூட ஆட்கள் இல்லை. ஐ.நா. வெளியேறுகிறது என்ற பிம்பம் 'இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்’ என்ற பொய்யான நிலையைப் பரப்பும்.
போர் முடிந்த பிறகும் காணாமல் போதல், பயங்கரவாதப் பிரிவில் கைது, அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் போன்றவை ஐ.நா-வின் தேவையை இன்னும் வலியுறுத்திக்கொண்டே உள்ளது.
மனித உரிமை சார்ந்த குற்றங்களை மனித உரிமைகள் சபையில் பதிவுசெய்தால், யார் அதைப் பதிவுசெய்தார்கள் என்ற விவரங்கள் புலனாய்வு பிரிவுக்கும் இராணுவத்​துக்கும் பகிரப்படும்போது, மனித உரிமை மீறல்கள் குறைந்துவிட்டது என்று எப்படி ஐ.நா. குறிப்பிட இயலும்?'' என்று அவர் என்னிடம் கேட்டார்.
2009 போரின்போது வெளியேறிய ஐ.நா. செய்த தவறை 2012 நவம்பரில் வெளியிடப்பட்ட சார்லஸ் பெட்ரி (ஐ.நா. அதிகாரி) தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கை உணர்த்துகிறது. ஐ.நா. வெளியேறியதால் நடந்த படுகொலைகள் உலகை அதிரவைத்தன.
பான் கி மூன் 2009 இலங்கைப் போரில் ஐ.நா. செய்த தவறுக்கு வெளிப்படையாக மன்னிப்பு கோரினார்.
2009-ல் நடந்த படுகொலைகள் 'பான் கி மூனின் ருவாண்டா’ எனவும் கூறப்பட்டது.
அப்படியான ஐ.நா. தவறை உணர்ந்ததுபோல் நடித்து, அதே தவறை மீண்டும் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறும் முடிவால் செய்ய இருக்கிறது.
தமிழர்களை முதுகில் குத்தும் இப்படியான ப(லி)ழி வாங்கல் வேலைகளே இலங்கையில் படுவேகமாக நடந்து வருகின்றன.
ஊடறுத்துப் பாயும்...
ஜூனியர் விகடன்

No comments: