Feb 22, 2013

இந்தியாவுக்கு இனியும் ஏன் தயக்கம்?


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பன்னிரண்டு வயது மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள ஆவணப் படங்கள், இங்கிலாந்தின் "சேனல்-4' தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, அவை பத்திரிகைகளிலும் பிரசுரமாகி, உலகமெங்கும் தமிழர் மனங்களில் அதிர்ச்சி, வேதனை, கோபம் என உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பன்னிரண்டு வயதுச் சிறுவன், கைதொடும் தொலைவில் துப்பாக்கியால் சுடப்படுவதை, "தாக்குதலுக்கு இடையே சிக்கி' இறந்ததாக யாராலும் சொல்ல முடியாது. ஆனாலும் இலங்கை அரசு இதை மறுக்கிறது. இலங்கை அரசின் இந்தியத் தூதரக அதிகாரி கரியவாசம், "இந்தப் படங்கள் கணினித் திரிபு படங்கள்' என்கிறார். இந்தப் பிரச்னையில் சர்வதேச விசாரணை தேவையில்லை என்று கூறிய அவர், பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் கொல்லவில்லை என்றும் சொல்கிறார்.
என்னதான் சொல்ல வருகிறார் இலங்கைத் தூதர் கரியவாசம்? உலக அனுதாபம் பெறுவதற்காக, விடுதலைப்புலிகளே பாலசந்திரனைக் கொன்றிருக்கலாம் என்று சொல்கிறாரா? அது நம்பும்படியாகவா இருக்கிறது?
"போர்நிறுத்தப் பகுதி: இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்தக் காட்சிகள் குறித்த தடயவியல் ஆய்வுகள் சொல்லும் உண்மை- "இவை கணினித்திரிபு படங்கள் அல்ல; இவை ஒரே கேமராவில் எடுக்கப்பட்டவை' என்பதுதான்.
அம்பலம் ஏறியுள்ள இந்த ஆவணத்தை, "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டார்' என்பதைக் கடந்து, இலங்கை ராணுவத்திடம் சிக்கிய சிறுவர்களும் பெண்களும் இவ்வாறுதான் கொல்லப்பட்டார்கள் என்பதற்கான போர்க்குற்ற ஆவணமாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இலங்கை ராணுவம், தனது கடைசி கட்டப் போரில், வெற்றியைத் தொட்டுவிட்ட மமதையுடன், எந்த வரையறையும் கட்டுப்பாடும் இல்லாமல் வெறித்தனமாகச் செயல்பட்டுள்ளது என்பதற்கான சாட்சியமாக இது பார்க்கப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று காரணம் கூறிக்கொண்டு, ஒட்டுமொத்தமாக அனைவரின் மீதும் தாக்குதல் நடத்திய இலங்கை ராணுவத்தின் வெறியினால்தான் குழந்தைகளும் பெண்களும் மிக அதிக எண்ணிக்கையில் இறந்தனர். இலங்கை அரசின் பாஷையில் சொல்வதாக இருந்தால் - "காணாமல் போயினர்'!
அப்பட்டமான போர்க்குற்றத்தின் சாட்சியாக, பாலச்சந்திரன் கொல்லப்பட்ட நிழற்பட ஆவணங்கள் அமைந்துள்ளன. இலங்கையின் கடைசிநேர அழித்தொழிப்புப் போரின் அத்துமீறல்கள் குறித்து முழு விசாரணை நடத்திடவும், இத்தகைய போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கவும் வேண்டும் என்பதே அனைவரின் குரலாக இருக்கிறது.
இந்த ஆவணப்படத்தைக் கண்ட தமிழ்நாட்டின் பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா, இலங்கையில் நடப்பது "ஹிட்லர் ஆட்சி' என்று கடுமையாகக் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியும், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் கொண்டுவர இருக்கும் கண்டனத் தீர்மானத்தின்போது "இலங்கையை இந்தியா காப்பாற்ற முயலக்கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தப் போர்க்குற்றம் குறித்து இந்திய அரசின் கருத்து என்ன என்பது பற்றி இதுவரை மத்திய அரசு கருத்துத் தெரிவிக்கவில்லை.
ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும் சொல்லிலடங்கா போர்க்குற்றங்கள் செய்த அமெரிக்காவே, இலங்கை அரசின் போர்க்குற்றத்துக்காக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரும் என்றால், ஏன் இத்தீர்மானத்தை எந்தப் போர்க்குற்றமும் செய்யாத இந்தியாவே கொண்டுவரக்கூடாது? இலங்கைத் தமிழர்களைக் காக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு இல்லையா?
இலங்கையில், குறிப்பாக வட இலங்கையில் மறு நிர்மாணப் பணிக்காகப் பல நூறு கோடி ரூபாய் நிதியுதவி செய்வதோடு இந்தியாவின் கடமை முடிந்து விடாது. போர் ஓய்ந்த நிலையிலும், தமிழர்கள் வீடுகள் இல்லாமல், பள்ளிகளும் ஆசிரியர்களும் இல்லாமல், மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இல்லாமல் வடகிழக்கு மாகாணத்தில் இப்போதும் வேதனை தொடர வாழ்கிறார்கள்.
தமிழர் மாகாணங்களுக்கு தன்னாட்சி வழங்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபட்ச வெளிப்படையாக அறிவித்துவிட்டார். அத்தோடு தமிழர் ஆட்சியும், தமிழர் அரசியலும்கூட இல்லாமல் செய்யும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றி, எல்லாப் பகுதியிலும் அவர்கள் சிறுபான்மையினராக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
வடகிழக்கு மாகாணத்தில் தமிழர் மட்டுமே இருப்பதால்தான் தமிழ் எம்.பி.-க்கள் தேர்வாகிறார்கள். இந்த நிலைமையைத் தகர்க்க, சிங்களர்களைக் குடியேற்றி, தமிழர் வாக்குவங்கியை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இலங்கை அரசு. ஊர்களின் தமிழ்ப் பெயர்களை சிங்களத்துக்கு மாற்றி, சிங்களர் குடியேற ஊக்கப்படுத்துகின்றது. அடுத்த பத்தாண்டுகளில் வடகிழக்கு மாகாணத்தில் தேர்வு செய்யப்படும் எம்பி-க்களில் தமிழர்கள் பாதியாகக் குறைந்துபோவார்கள். அரசியல் பங்களிப்பிலும் தமிழர்கள் இல்லாமல் ஒடுக்குவதுடன் நின்றுவிடாமல், தமிழர்களை வெறும் மொழிச் சிறுபான்மையினராக மாற்றும் பணியில் ராஜபட்ச அரசு முனைப்புடன் செயல்படுகிறது.
ஒட்டுமொத்தத் தமிழகத்தின், உலகளாவிய தமிழர்களின் கோரிக்கையை மன்மோகன் சிங் அரசு ஏற்று செயல்படப்போகிறதா, இல்லை போர்க்குற்றவாளியாக உலகமே கருதும் இலங்கை அதிபர் ராஜபட்சவின் பாதுகாவலர்களாக இருந்து அவரைக் காப்பாற்றப் போகிறதா என்பதுதான் கேள்வி. இத்தனை ஆதாரங்கள் கிடைத்த பிறகும் இனியும் ஏன் தயக்கம்?

No comments: