Jun 26, 2014

உணவு யுத்தம்!-14

விவசாயத்தில் பன்னாட்டு நிறுவனங்கள்!
ஒரு நாளைக்கு 20 ரூபாய் கிடைக்கிறது என்பதற்காக தனது 73 வயதிலும் வீடு வீடாக கூடை தூக்கிக்கொண்டு போய் கீரை விற்கும் பாட்டியை நான் அறிவேன். முதுமையில் யாருக்கும் சுமையாக வீட்டில் இருக்கக் கூடாது, படிக்க விரும்பும் பேரன் பேத்திகளுக்கு ஃபீஸ் கட்டுவேன் என்ற இரண்டு காரணங்களை அந்தப் பாட்டி எப்போதும் சொல்வார். அவரைப்போன்ற நூறு நூறு உழைக்கும் பெண்களின் வாழ்க்கையை முடிவு கொண்டுவரக் கூடிய அந்நிய நேரடி முதலீட்டை ஆதரிக்கக் கூடாது.
இந்தியாவில் பல்வேறு வகையான சில்லறை வணிகங்களில் ஈடுபடுகின்றவர்களின் எண்ணிக்கை நான்கு கோடி. இவர்கள் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள். இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்து 60 ஆயிரம் கோடிக்கு சில்லறை வர்த்தகம் நடந்து வருகிறது. அந்நிய நேரடி மூலதனத்தால் இவர்களின் விற்பனை மோசமாகப் பாதிக்கப்படும்.
காய்கறிக் கடைகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக நடத்தத் துவங்கினால் விவசாயிகள் லாபம் அடைவார்கள் என்ற பொய் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. அது ஏமாற்று வேலை. காரணம், ஒப்பந்தம் செய்யப்பட்ட விவசாயிகள் இவர்களைத் தவிர வேறு நிறுவனத்திடம் பொருளை விற்க முடியாது. அதுபோலவே இதுவரை கிடைத்துவந்த இடைத்தரகு பணத்தை கம்பெனி, தானே எடுத்துக்கொள்ளும்.
விவசாயி தனது பொருளின் விலையை உயர்த்த முடியாமல் அவனை அடிமாடுபோல முடக்குவதுடன் அவன் என்ன விவசாயம் செய்ய வேண்டும் என்பதை இந்தத் நிறுவனங்கள் தீர்மானிக்கத் தொடங்கும். ஆகவே, விவசாயிகளுக்கு இப்போது கிடைக்கும் ஊதியத்தைவிட குறைவான பணமே கிடைக்கும் என்பதே உண்மை. அத்துடன் இதுவரை இயங்கிவந்த கூட்டுறவு வேளாண்மை அமைப்புகள் முழுவதும் செயலற்றுப் போகத் தொடங்கிவிடும். சில்லறை விற்பனைத் துறையில் அந்நிய முதலீடுகள் வருகையால் நமது சந்தை சீரழிவதுடன் விவசாயிகள் முன்னிலும் மோசமாகச் சுரண்டப்படுவார்கள். ஆகவே, காய்கறிக் கடைகள் போன்ற சிறுவணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
எனது பள்ளி வயதில் வீதி வீதியாகப் போய் காய்கறிகள் விற்றிருக்கிறேன். எங்கள் தோட்டத்தில் விளைந்த கத்தரிக்காயும் புடலங்காயும் சுரைக்காயும் பாகற்காயும் வெண்டையும்  பூசணியும் முருங்கையும் கூடையில் வைத்துக்கொண்டு வீதிவீதியாக கூவி விற்க வேண்டும்.
உள்ளூரில் இவற்றை வாங்குபவர்கள் குறைவு. அதனால் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு சைக்கிளில் போய்வர வேண்டும். காய்கறிகள் விற்கப் போனபோதுதான் எத்தனை வகையான மனிதர்கள் இருக்கிறார்கள், என்ன சாப்பிடுகிறார்கள் என்பதைக் கண்டுகொண்டேன். உணவு விஷயத்தில் ஒரு வீட்டைப்போல இன்னொரு வீடு  இருப்பதில்லை.
பெண்கள் காய்கறி வாங்க வந்த பிறகுதான் என்ன சமையல் செய்யலாம் என்று யோசனை செய்வார்கள். சிறுவர்கள் காய் வாங்க வந்தாலோ, சற்று எடை அதிகமாகப் போட்டுத் தர வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகளை ஏமாற்றிவிட்டோம் என்று கூச்சலிடுவார்கள்.
அதுபோலவே ஆண்கள் காய்கறி வாங்கினால் அழுகிய காயோ, பூச்சியோ இல்லாமல் கவனமாகப் பொறுக்கி சரியான அளவு எடை நிறுத்துத் தர வேண்டும். இல்லாவிட்டால், விவரம் தெரியாத ஆளை ஏமாற்றிவிட்டதாக வீட்டுப் பெண்கள் சண்டைக்கு வந்து நிற்பார்கள். காய்கறிகளைப் பார்த்து வாங்குவதில் மக்கள் அவ்வளவு விழிப்புடன் இருப்பார்கள்.
காய்கறிகள் வாடிப்போய்விட்டால், அதை விற்க முடியாது. இப்போது அந்தக் கவலை இல்லை. இரண்டு மூன்று நாட்கள் ஆகி, வாடிவதங்கிய இரண்டாம் நம்பர் காய்கறிகளை உணவகங்களுக்கு மலிவு விலையில் விற்றுவிடுகிறார்கள். நாம் சுவைத்துச் சாப்பிடும் சைவ சாப்பாடுகளில் இடம்பெறும் காய்கறிகள் இப்படி மலிவாக வாங்கப்பட்டவையாகக்கூட இருக்கலாம்.
உணவு என்பது பசியைப் போக்குவதற்கான வழிமுறை மட்டும் இல்லை. அது ஒரு பண்பாடு. ஒவ்வொரு இனக் குழுவும் தனக்கென ஒரு உணவுப் பண்பாட்டைக் கொண்டிருக்கிறது. அந்தப் பண்பாடு நிலவியலுக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்றார்போல மாறியிருக்கிறது.
உணவுப் பண்பாட்டைத் தீர்மானிப்பது வாழ்க்கைமுறையும் சீதோஷ்ண நிலைகளும்தான். இன்று இரண்டும் தலைகீழாக மாறிவிட்டிருக்கின்றன. எந்தப் பருவ காலத்தில் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்ற கவனம் பெரும்பான்மையினருக்கு இல்லை.
அதுபோலவே குறிப்பிட்ட காய்கறி வகை குறிப்பிட்ட காலத்தில்தான் விளையும் என்ற நிலையும் இல்லை. இந்த மாற்றம்தான் ஆரோக்கிய சீர்கேட்டுக்கான முக்கியக் காரணம்.
பெருநகரங்களில் விற்கப்படும் காய்கறிகளுக்கு ருசியே இருப்பது இல்லை. தண்ணீர் மற்றும் மண்வாகு காரணம் என்கிறார்கள். கிராமப்புறங்களில் கத்தரிக்காய் வாங்கும்போது, எந்த ஊர் காய் என்று கேட்டு வாங்குவார்கள். மண்வாகுதான் காய்கறிகளுக்கு ருசி என அவர்களுக்குத் தெரியும்.
இன்று குளிர்சாதனம் செய்யப்பட்ட கடைகளில் விற்பனையாகும் காய்கள், எந்த ஊரில் விளைந்தவை என்று யாருக்கும் தெரியாது. அதைவிடக் கொடுமை எல்லா காய்கறிகளின் பெயர்களையும் ஆங்கிலத்தில்தான் எழுதிப் போட்டிருப்பார்கள். தமிழ்நாட்டில் காய்கறி பேரில்கூடவா தமிழ் அழிக்கப்பட வேண்டும்?
எந்தக் காய்கறியைக் கேட்டாலும் ஊட்டியில் விளைந்தவை என்று சொல்லிக்கொள்கிறார்கள். கோயம்பேட்டுக்குப் போய் பார்த்தால் நாட்டுக் காய்கறிகளைவிடவும் அதிகம் சீமைக் காய்கறிகள்தான் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
கேர‌ட், பீ‌ட்ரூ‌ட், சௌசௌ, நூ‌க்கோ‌ல், ப‌ட்டா‌ணி, மு‌‌ள்ளங்‌கி, பீன்ஸ், முட்டைக்கோஸ், சோயா, பீட்ரூட், காலிஃபிளவர் போன்ற இங்கிலீஷ் காய்கறிகள் போர்த்துகீசியர்களாலும் பிரெஞ்சுகாரர்களாலும் பிரிட்டிஷ்காரர்களாலும் நமக்கு அறிமுகம்செய்து வைக்கப்பட்டவை.
மிளகாய், அன்னாசிபழம், உருளைக்கிழங்கு, தக்காளி, பப்பாளி ஆகியவை போர்த்துகீசியர்களின் வழியே நமக்கு அறிமுகமானவை. முன்பு நாம் காரத்துக்காக மிளகைப் பயன்படுத்தி வந்தோம். அதற்குப் பதிலாக அறிமுகமானது என்பதால்தான் மிளகாய் என்று பெயர் உருவானது. மிளகாய் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் விளைந்த தாவரம்.
வெண்டைக்காய், எத்தியோப்பியாவில் இருந்து வந்தது. பீட்ரூட் தெற்கு ஐரோப்பாவில் இருந்து அறிமுகமானது. காலிஃபிளவர் இத்தாலியில் விளையக் கூடியது. அங்கிருந்து ஃபிரான்ஸுக்கு அறிமுகமாகி இந்தியாவுக்கு வந்தது. கேரட் ஆப்கானிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்டது. முட்டைக்கோஸ் மத்தியத் தரைக்கடல் பகுதியில் இருந்து கிரேக்கத்துக்கு அறிமுகமானது. அங்கிருந்து ஸ்காட்லாந்துக்கு சென்று, அங்கிருந்து பிரிட்டிஷ் வழியாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது.
‘தக்காளிக்கு தக்காளி என்ற பெயர் எப்படி வந்தது? யார் இதை வைத்தது?’ என்று என் பையன் ஒருநாள் கேட்டான். எனக்குப் பதில் தெரியவில்லை என்பதால், தமிழ்ப் பேரகராதியைப் புரட்டிப் பார்த்தேன். மணத்தக்காளி என்ற சொல் நம்மிடம் உள்ளது. ஒருவேளை வடிவம் சார்ந்து சீமைத்தக்காளி என்ற பெயர் வந்திருக்கக் கூடும். சீமை காணாமல் போய் தக்காளியாக இன்று எஞ்சியிருக்கலாம் என்று பதில் சொன்னேன்.
போர்த்துகீசியர்களால் நமக்கு அறிமுகமான காய்கறிகளில் முக்கியமானது தக்காளி. ஆங்கிலத்தில் இதற்கு வழங்கும் பெயரான டொமேட்டோ என்பது நஃகுவாட்டில் மொழிச் சொல்லான டொமாட்ல் என்பதில் இருந்து வந்ததாகும். அதற்கு உருண்டையான பழம் என்று அர்த்தம்.
பல்வேறு கலாசாரங்களின் சமையல் முறைகளில் எப்போதும் தக்காளிக்கு என்று ஒரு தனி இடம் இருக்கிறது. வட ஐரோப்பாவில் தக்காளி அறிமுகப்படுத்தப்பட்டபோது, அது வெறும் அலங்காரச் செடியாக மட்டுமே வளர்க்கப்பட்டது. இத்தாலிக்குக் கொண்டுவரப்பட்ட தக்காளி மஞ்சள் நிறத்தில் இருந்த காரணத்தால், அதை  போமோடோரோ அதாவது தங்க ஆப்பிள் என்று அழைத்தனர்.
ஐரோப்பாவில் இருந்து அட்லாண்டிக் வழியாகத் திரும்பவும் வட அமெரிக்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்ட தக்காளி, 19-ம் நூற்றாண்டில் உலகின் முக்கிய உணவு ஆனது.
தக்காளியின் நிறம் என்னவென்று கேட்டால், பெரும்பாலும் ‘சிவப்பு’ என்போம். ஆனால் மஞ்சள், ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, ஊதா, பிரவுன், வெள்ளை, பச்சை நிறங்களிலும் தக்காளி இருக்கின்றன.
த‌க்காளியை எதில் சேர்ப்பது காயா அல்லது ப‌ழ‌மா என்ற சந்தேகம் பலருக்குள்ளும் இருக்கிறது. அமெரிக்காவில் இதற்காக நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். 1893-ம் வ‌ருஷ‌ம், அமெரிக்க‌ உச்ச ‌நீதிம‌ன்ற‌ம் த‌க்காளி ஒரு காய்தான் ‍எனத் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
பல இங்கிலீஷ் காய்கறிகளுக்கு இன்னமும் தமிழ்ச் சொல் உருவாகவில்லை. அதை அப்படியே ஆங்கிலத்தில்தான் அழைக்கிறோம். சில காய்கறிகளை வடிவம் சார்ந்து தமிழ்படுத்தியிருக்கிறோம். சில காய்கறிகளை உள்ளூர் காய்கறிகளுடன் ஒப்பிட்டுப் பெயர் கொடுத்திருக்கிறோம்.
முன்பெல்லாம் இயற்கை உரங்களைக் கொண்டு விளைவித்த காய்கறிகளை, தோட்டத்தில் இருந்து நேரடியாகப் பறித்துச் சாப்பிட்டோம். அவற்றில் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் எதுவும் கலக்கப்படவில்லை.
இன்றோ இந்தியாவில் உற்பத்தியாகும் 10 கோடி டன் காய்கறிகளை, பூச்சித் தாக்குதலில் இருந்து பாதுகாக்க, 6,000 டன் பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்படுகிறது என்கிறார்கள். சர்வதேச அளவுடன் ஒப்பிட்டால், இது 68 சதவிகிதம் அதிகம்.
காய்கறிகள் உடலுக்கு நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், பூச்சி மருந்துகளும் ரசாயனக் கலவைகளும் கலந்த காய்கறிகளை, கொள்ளை விலையில் விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்தவும், இயற்கையாக விளைந்த காய்கறிகளை நேரடியாக விநியோகம் செய்யவும் முறையான வழிமுறைகள் இன்னமும் உருவாக்கப்படவில்லை.
குளிர்பிரதேசங்களில் வசிப்பவர்கள் அவர்கள் உடல்நலத்துக்கு ஏற்ப காய்கறிகளைப் பயிரிட்டு சாப்பிட்டார்கள். அந்தக் காய்கறிகளை வெப்பமண்டலத்தில் வாழ்ந்துகொண்டு நாம் அன்றாடம் விரும்பி சாப்பிடுவது, நம் உடல்நலத்துக்குப் பொருத்தம் இல்லாதது.
ஆகவே, நாட்டுக் காய்கறிகளுக்கே நம் உணவில் முக்கியத்துவம் தர வேண்டும். கீரைகள், பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவதற்கு குழந்தைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். சரிவிகித உணவில் எந்தக் காய்கறிகள் எவ்வளவு தேவை என்பதை அறிந்து உண்ண வேண்டும். இல்லாவிட்டால் உணவின் பெயரால் நமக்கு நாமே விஷமிட்டுக் கொள்கிறோம் என்பது நிஜமாகிவிடும்.

1 comment:

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான பதிவு
ஆழமாகச் சிந்தித்து எளிமையாக அருமையாக
விரிவாகப் பதிந்த விதம் மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்