Jun 29, 2014

உணவு யுத்தம் 18


உணவு யுத்தம்! – 18


டூப்ளிகேட் ஜவ்வரிசி!

ஜவ்வரிசிக்குப் போடப்பட்ட தடையை சமாளித்து, தொழிலை முன்னெடுத்துச் செல்லவே 1943-ல் சேகோ உற்பத்தியாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. இந்தச் சமயத்தில் தமிழகத்துக்கு வெளியே ஜவ்வரிசியைக் கொண்டுபோய் விற்கவும் அன்றைய அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து சேகோ உற்பத்தியாளர் சங்கம் போராடவே, இந்தத் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
1944-ல் 24 பவுண்டுகள் கொண்ட குச்சிக் கிழங்கு மாவு ரூ.20-ல் இருந்து ரூ.24 வரை விற்றது. இதன் தயாரிப்புச் செலவு வெறும் நான்கு ரூபாய்தான். இதனால், ஜவ்வரிசி தொழிலில் லாபம் கொட்டியது.
ஆனால், உலகப்போர் முடிந்த பிறகு, பனையில் இருந்து தயாரிக்கப்படும் ஒரிஜினல் சேகோவை நேரடியாக இறக்குமதி செய்வதற்கு, பலருக்கும் பிரிட்டிஷ் அரசு உரிமை வழங்கியது. இந்த நிலையில் ஒரிஜினல் ஜவ்வரிசியைவிட டூப்ளிகேட் ஜவ்வரிசி சந்தை பிரபலமாகி இருந்த காரணத்தால், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என, இறக்குமதி உரிமை பெற்றவர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதோடு, இந்த நகல் ஜவ்வரிசியை சேகோ என்று அழைக்கக் கூடாது என முறையிட்டார்கள்.
‘மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி சந்தை பெருகிவிட்டது. அதோடு, இதன் விலை மலிவு என்பதால் அதை அரசு கட்டுப்படுத்தக் கூடாது’ என்று சேகோ உற்பத்தியாளர் சங்கம் அரசிடம் முறையிட்டது.
அப்போது ராஜாஜி தொழில் துறை அமைச்சராக இருந்த காரணத்தாலும், அவர் சேலம் பகுதி வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவர் என்பதாலும், வெளிநாட்டில் இருந்து ஜவ்வரிசியை இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதற்கு, தற்காலிகத் தடை விதித்தார். 1949 வரை இந்தத் தடை அமலில் இருந்தது.
1950-க்குப் பிறகு இந்தியாவுக்குள் கிழக்கிந்தியத் தீவுகளில் இருந்து அசல் சேகோ இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையானது. அசல் ஜவ்வரிசியின் நிறம், லேசான தவிட்டு நிறம் கொண்டது. ஆனால் டூப்ளிகேட் ஜவ்வரிசி பளீரென ஒளிரும் வெண்மை நிறமுடையது. அசல் சரக்கு விலை அதிகம் என்பதால், அதன் விற்பனை குறையத் துவங்கியது. வங்கத்தில் ஜவ்வரிசி அதிகம் விற்பனையானதால், அங்குள்ள வணிகர்கள் போலி ஜவ்வரிசியை வாங்கி அதன் நிறத்தை மாற்றி, ஒரிஜினல் மலேசியன் சேகோ என விற்கத் தொடங்கினர்.
இப்படி நிறத்தை மாற்றித் தருவதற்கான சாயமேற்றும் நிறுவனங்கள் உருவாகின. இவர்கள் மரவள்ளிக் கிழங்கு ஜவ்வரிசியை ரசாயனம் மூலம் நிறம் மாற்றி ஒரிஜினல் மலேசியன் ஜவ்வரிசி என விற்பனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அதிக லாபம் கிடைக்கிறது என அறிந்துகொண்ட வணிகர்கள் பலரும், நிறம் மாற்றிய போலி ஜவ்வரிசிகளைச் சந்தையில் விநியோகம் செய்ய ஆரம்பித்தனர்.
மக்களால் இரண்டு ஜவ்வரிசிகளுக்கும் பெரிய வேறுபாடு கண்டறிய முடியவில்லை என்ற ஒரு காரணத்தை வைத்து, கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்கத் தொடங்கினர்.
இப்படிப் போலி ஜவ்வரிசிகள் வருவதை அறிந்த சுகாதாரத் துறை, இதனைக் கண்டறிந்து டூப்ளிகேட் ஜவ்வரிசி மூட்டைகளைக் கைப்பற்றி அழித்தனர். இதனால், சேகோ தொழில் ஆட்டம் காணத் தொடங்கியது.
‘மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசி ஆரோக்கியமான உணவுதான். அதைச் சாப்பிடுவதால் உடல்நலக் குறைவு ஏற்படாது. இதைத் தனித்த ஒரு தொழிலாக அங்கீகாரம் செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்காக மேற்கு வங்கத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில் முடிவு எட்டப்படவில்லை.
வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தபோது, டாக்டர் பி.சி.ராய் வழியாக சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டு, சாதகமான ஒரு முடிவு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, இந்தியத் தர நிர்ணயக் கழகமும் சேகோ நிபுணர் கமிட்டியும் ஒன்றுகூடி ஆய்வுசெய்து, மரவள்ளிக் கிழங்கில் இருந்து செய்யப்படும் ஜவ்வரிசியை சேகோ என்று அழைக்கலாம் என அறிவித்தது. அதே நேரம், இதில் கலப்படம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை செய்தது.
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் தவிர, ஆந்திர மாநிலம் சாமல்கோட் பகுதியிலும் சேகோ ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
உணவாக மட்டுமின்றி, பருத்தித் துணிகளைச் சலவை செய்யும்போது கஞ்சி போட ஜவ்வரிசி உதவியது. இதனால், அதன் தேவை மேலும் அதிகரித்தது. இந்த வளர்ச்சியால் சேலத்தைச் சுற்றி வாழப்பாடி, ஆத்தூர், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு புதிய பயிராக அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தமாக 85 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி விளைவிக்கப்படுகிறது.
மரவள்ளிக் கிழங்கு, தென் அமெரிக்காவையும் மேற்கு ஆப்பிரிக்காவையும் தாயகமாகக் கொண்ட தாவரம். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, இன்று உலகின் மிகப்பெரிய மரவள்ளிக் கிழங்கு உற்பத்திசெய்யும் நாடு. உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 500 மில்லியன் மக்கள் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். உலகின் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் இந்தியா மட்டும் ஆறு சதவிகிதம் உற்பத்தி செய்கிறது.
இனிப்பு மரவள்ளி, கசப்பு மரவள்ளி என இரண்டு வகை மரவள்ளிகள் உள்ளன. இந்தியாவில் 17-ம் நூற்றாண்டில் கேரளாவில் போர்த்துகீசியர்களால் மரவள்ளிக் கிழங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில், 3.1 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்படுகிறது. 60 லட்சம் டன் கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கு இந்தியாவின் 13 மாநிலங்களில் பயிரிடப்படுகிறது என்றாலும், கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களில் அதிகமாகப் பயிராகிறது. நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை மரவள்ளிக் கிழங்கு அதிகம் விளைகிறது.
கேரளாவில் கப்பைக் கிழங்குடன் மீன் சாற்றைத் தொட்டு உண்பதை முக்கிய உணவாகக் கொண்டிருக்கிறார்கள். அவித்த கிழங்கை மிளகாய், உப்பு போன்ற பொருட்களுடன் சேர்த்து உண்பதும் உண்டு. கிழங்கைக் குறுக்காகச் சீவி, எண்ணெயில் இட்டுப் பொரித்து சிப்ஸாகவும் சாப்பிடுகிறார்கள்.
உற்பத்தி செய்யப்படும் மரவள்ளிக் கிழங்கில் 58 சதவிகிதம் மனிதர்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. 28 சதவிகிதம் கால்நடைத் தீவனமாகவும், நான்கு சதவிகிதம் ஆல்கஹால் மற்றும் ஸ்டார்ச் சார்ந்த துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
உணவுத் தொழில்களிலும், பசைத் தயாரிப்பிலும் ஸ்டார்ச் பயன்படுகிறது. இன்று தமிழ்நாட்டில் ஜவ்வரிசித் தொழிலில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆலைகள் மூலம் வருடத்துக்கு 23 லட்சம் மூட்டை ஜவ்வரிசியும், அது தவிர ஸ்டார்ச் மாவும் தயாரிக்கப்படுகின்றன.
ஸ்டார்ச் மாவில், மக்காச்சோளம் மாவை கலப்படம் செய்து ஜவ்வரிசி தயார் செய்கிறார்கள். அதிகப்படியான வருவாயை ஈட்ட, எடை கூட வேண்டும் என்பதற்காக சுண்ணாம்பு பவுடர், சோக் பவுடர் போன்றவற்றைக் கலக்கின்றனர் எனப் பல குற்றச்சாட்டுகள் சமீபமாக எழுந்துள்ளன.
மரவள்ளிக் கிழங்கில், தோல் நீக்கிய பின்பே மாவு தயாரிக்க வேண்டும். ஆனால் பல தொழிற்சாலைகள், தோலை நீக்காமலேயே, ஸ்டார்ச் தயாரிக்கின்றன. தோல் கலந்த ஸ்டார்ச்சை வாங்கிச் செல்லும் வணிகர்கள், இதைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பொருட்களில் கலக்கின்றனர். குறிப்பாக, சில ஐஸ்க்ரீம் தயாரிப்பவர்கள் பால் மூலம் க்ரீம் தயாரிக்கச் செலவு அதிகம் என்பதால், ஸ்டார்ச் மாவு கலந்த கிரீமைப் பயன்படுத்துகின்றனர்.
சில்லி சிக்கன், மீன் வறுவல் ஆகியவற்றிலும், மொறுமொறுப்பு வேண்டும் என்பதற்காக ஸ்டார்ச் கலக்கின்றனர். இதனைச் சாப்பிடும் குழந்தைகள், வயிற்று வலி, அல்சர் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உட்படுவார்கள். இந்திய உணவு பாதுகாப்புச் சட்டப்படி, ஜவ்வரிசியில் இது போன்ற கலப்படங்கள் செய்வது குற்றம். நோயாளிகளுக்கு உணவாக அளிக்கப்படும் ஜவ்வரிசியில் கலப்படம் செய்வது, மனித உயிருடன் விளையாடுவதாகும்.
உணவை நஞ்சாக்கும் இதுபோன்ற வணிக முயற்சிகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் பாயசமாக இருந்தாலும் நம்பி சாப்பிட முடியாத நிலை உருவாகிவிடும். இனிப்புக்காகச் சாப்பிடும் பாயசத்தின் பின்னே இத்தனை கசப்பான உண்மைகள் மறைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. உணவுச் சந்தையின் மோசடிகளை நினைத்தால் அடுத்த வேளை என்ன சாப்பிடுவது என்பதே பயமாக இருக்கிறது.

No comments: