Jun 25, 2014

உணவு யுத்தம்! - 9

 தியேட்டரும் பாப்கார்னும்!

திருவிளையாடல் பார்த்திருக்கிறீர்கள்தானே! அதில் தருமி சிவனிடம் நிறைய கேள்விகள் கேட்பார். தருமி கேட்கத் தவறிய கேள்விகள் எப்போதும் இருக்கின்றன. அப்படியான சில கேள்விகளாக இதைச் சொல்லலாம்.
பிரிக்க முடியாதது என்னவோ?
தியேட்டரும் பாப்கார்னும்!
சேர்ந்தே இருப்பது?
பாப்கார்னும் கூல்டிரிங்ஸும்!
சேராமல் இருப்பது?
வயிறும் ஃபாஸ்ட் ஃபுட்டும்!
சொல்லக் கூடாதது?
பாப்கார்ன் விலை!
சொல்லக் கூடியது?
காசு கொடுத்து வயிற்றுவலியை வாங்கிய கதை!
பாப்கார்ன் என்பது?
பகல் கொள்ளை!
சினிமா தியேட்டரில் பாப்கார்ன் விற்பது எதனால்?
படம் நல்லா இல்லை என்பதை மறக்கடிக்க!
தருமியைப்போல நாம் எப்போதும் கேள்விகளை மட்டுமே வைத்திருக்கிறோம். யாரிடம் பதில் கேட்பது எனத் தெரியவில்லை. இன்று உணவின் பெயரால் பகிரங்கக் கொள்ளை நடைபெறும் முக்கிய இடம் திரையரங்கம்.
சென்னை ஷாப்பிங் மாலில் உள்ள மல்டிஃப்ளெக்ஸ் திரையரங்கு ஒன்றுக்குப் படம் பார்க்கப் போயிருந்தேன். டிக்கெட் கட்டணம் 120, உள்ளே போய் உட்கார்ந்த உடன் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டு ஊதா நிற சட்டை அணிந்த ஓர் இளைஞன் இரண்டு மெனு கார்டுகளை நீட்டினார்.
பீட்சா, வெஜ் ரோல், பர்கர், ஃபிரெஞ்ச் ஃபிரைஸ், பேல்பூரி, பானிபூரி, நக்கட்ஸ் என முப்பது, நாற்பது உணவு வகைகள். தவறிப்போய் ஏதாவது ஹோட்டலுக்குள் நுழைந்துவிட்டேனோ என நினைத்தபடியே திரும்பிப் பார்த்தேன்.
அருகில் உட்கார்ந்திருந்த ஒரு குடும்பம் கடகடவென ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தனர். படம் துவங்கிய அரை மணி நேரத்தில் பெரிய தட்டு நிறைய சான்ட்விச், பீட்சா, வெஜ் ரோல் என வந்து சேர்ந்தது. கூடவே, இரண்டு அரை லிட்டர் கூல்டிரிங்ஸ் பாட்டில், டைனிங் டேபிள் இல்லாத குறை மட்டுமே. அவர்கள் இடைவேளை வரை சாப்பிட்டுக்கொண்டே படம் பார்த்தார்கள். பக்கத்தில் உட்கார்ந்திருந்த இன்னொருவர் அவர்கள் சாப்பிடுவதை எச்சில் ஒழுகப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
சினிமா தியேட்டரா அல்லது ரெஸ்டாரன்ட் உள்ளே சினிமா போடுகிறார்களா எனத் தெரியாமல் தடுமாறிப்போனேன். இடைவேளை விடப்பட்டது. வெளியே பாப்கார்ன் வாங்க நீண்ட வரிசை. ஒரு பாப்கார்ன் விலை ரூ.80-ல் துவங்கி 240 வரை லார்ஜ் சைஸ், எக்செல், டபுள் எக்செல் என விரிந்துகொண்டே போனது.
அரை கிலோ அளவு பாப்கார்ன் பாக்கெட் ஒன்றை சுமந்துகொண்டு போனது அந்தக் குடும்பம். கூடவே நான்கு குளிர்பானங்கள், சமோசா, பப்ஸ், சாஷ் பாக்கெட்கள், சாக்லேட் மபின், இத்யாதிகள்.
ஒரு காபி குடிக்கலாம் என்று கவுன்ட்டரில் இருந்த பெண்ணிடம் கேட்டேன். 75 ரூபாய் என்றார். என்ன காபி எனக் கேட்டபோது ரெடிமேட் பால் படவுரைக் கொண்டு தயாரிக்கப்படும் மெஷின் காபி எனச் சொன்னார். குடிக்க முடியாத குமட்டல் காபியின் விலை 75 என்பதால் அது வேண்டாம் எனச் சொல்லிவிட்டு, தண்ணீர் பாட்டில் தாருங்கள் என்றேன். ஒரு பாட்டில் தண்ணீர் 50 ரூபாய் என்றார். வெளியே 10 ரூபாய்தானே என்றபோது, தியேட்டரில் 50 ரூபாய்தான் என்றார். இதைப்பற்றிப் புகார் தெரிவிக்க விரும்புகிறேன் என்றேன். தியேட்டர் மேனேஜரிடம் போய்ச் சொல்லுங்கள். இவை தனியார் கடைகள். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்றார் அந்த விற்பனை பெண்.
பொதுக் குடிநீர் எங்கே இருக்கிறது எனக் கேட்டேன். அப்படி ஒன்று கிடையாது. கடையில் விற்பதை மட்டுமே வாங்க வேண்டும் என்றார். தினமும் பல்லாயிரம் பேர் வந்துபோகிற அரங்கில் குடிநீர் கிடையாது. இதில் நாமாக வீட்டில் இருந்து எந்த உணவுப்பொருளையும் கொண்டுபோய்விடக் கூடாது என்பதற்காக மெட்டல் டிடெக்டர் சகிதமாக ஒரு கும்பல் நுழைவாயிலில் நம்மை நிறுத்திவைத்துத் தடவி தடவி சோதிக்கின்றனர்.
இந்தச் சோதனையில் ஒரு பெரியவரிடம் திருப்பதி லட்டு சிக்கிவிட்டது. கோயிலுக்குப் போய்விட்டு வந்தவர், அப்படியே சினிமா பார்க்க நுழைந்திருக்கிறார். அதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். சாமி பிரசாதம் என அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அனுமதிக்கவே இல்லை. லட்டை தனியே எடுத்து அவருக்கு ஒரு ரசீது சீட்டு போட்டுக் கொடுத்து, படம் முடியும்போது பெற்றுக்கொள்ளுங்கள் என்று உள்ளேவிட்டார்கள். இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலகத்தில்கூட இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடி இருக்குமா எனத் தெரியாது.
சினிமா தியேட்டர் என்பது படம் பார்க்கும் இடம் இல்லை. அது ஒரு சந்தைக்கூடம். அங்கே படமும் பார்க்கலாம் என்பதே இன்றைய நிஜம். இலை போட்டு முழு சாப்பாடு போடவில்லை. அதுவும் விரைவில் நடந்தேறிவிடக் கூடும்.
ஒரு நாடகம் பார்க்கும்போதோ, இசை நிகழ்ச்சி பார்க்கும்போதோ இப்படி வாயில் எதையாவது மென்றுகொண்டே ரசிப்பதில்லையே... சினிமா பார்க்கும்போது மட்டும் ஏன் எதையாவது மென்றுகொண்டேயிருக்க ஆசைப்படுகிறோம்?
சர்க்கஸ் நிகழ்ச்சியில் ஒரு நிகழ்வுக்கும் மற்றொரு நிகழ்வுக்கும் இடையில் சற்று இடைவெளி இருக்கும். அதை நிரப்புவதற்கே பாப்கார்ன் விற்பனை உதவியது. அந்தப் பழக்கம்தான் சினிமா பார்க்கும்போதும் தொடர்கிறது என்கிறார் உணவியல் அறிஞர் மெக்ரெயன்.
எனக்கென்னவோ நம் ஊரில் எந்த இடத்திலும் எதையும சாப்பிடுவதற்கு ஒரு காரணமும் தேவை இல்லை என்றே தோன்றுகிறது. கண்டதையும் சாப்பிடத் தயாராக இருப்பதுதானே நமது பண்பாடு. இல்லாவிட்டால் ராத்திரி ஒன்றரை மணிக்கு மிட்நைட் ஹோட்டலில் இவ்வளவு கூட்டம் அலைமோதுமா என்ன?
ஒருமுறை சாலையோர உணவகம் ஒன்றுக்குச் சாப்பிடப் போயிருந்தேன். கடையை எடுத்துவைத்துவிட்டார்கள். சூடாக இருந்த கல்லில் தோசை போட்டுத் தருகிறேன்... உட்காருங்கள் என்றார் உரிமையாளர். பரிமாறுகிறவன் எரிச்சலான குரலில் சொன்னான். 'என்னா சார் மனுசங்க... விடிஞ்சு எழுந்ததில் இருந்து தூங்கப் போறவரைக்கும் எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்காங்க. நல்லவேளை தூக்கத்துல சாப்பிடுறது இல்லை. இப்படியே போனா, உலகம் தாங்காது. ஒருத்தருக்கும் வாயைக் கட்டணும்னு நினைப்பே கிடையாது.’
அவன் சொன்ன விதம் சிரிப்பாக வந்தது. ஆனால், சொன்ன விஷயம் உண்மையானது. சாவு வீட்டுக்குப் போனால்கூட நமக்கு வகை வகையான சாப்பாடு வேண்டியிருக்கிறது. ஏன் இப்படி நாக்கின் அடிமைகளாக மாறியிருக்கிறோம். இந்தப் பழக்கத்தின் ஒரு பகுதிதான் தியேட்டருக்குள் அள்ளி அப்பிக்கொள்வது.
எனது பள்ளி வயதில் சினிமா தியேட்டரில் இடைவேளையின்போது முறுக்கு, கடலை மிட்டாய் விற்பவர்களைக் கண்டிருக்கிறேன். அவர்களின் குரலே வசீகரமாக இருக்கும். முறுக்கின் விலை 5 பைசா, கடலை மிட்டாய் 5 பைசா. தவிர தேங்காய் பர்பி, வேர்க்கடலை, பால் ஐஸ், சேமியா ஐஸ் விற்பார்கள். சோடா கலர் விற்பதும் உண்டு. சினிமா பார்க்க வருபவர்களில் பாதி பேர் எதுவும் வாங்கிச் சாப்பிட மாட்டார்கள். அது கௌரவக் குறைச்சல் என நினைப்பார்கள்.
பாப்கார்ன் விற்பது 80-களின் பிற்பகுதியில்தான் திரையரங்குகளில் துவங்கியது. அப்போதும்கூட சோளப்பொரியை மனுசன் தின்பானா என யாரும் வாங்க மாட்டார்கள். இன்றைக்கு பாப்கார்ன் விற்கப்படாத தியேட்டர்களே இல்லை. ஒரு ஆண்டுக்கு 1,235 கோடி ரூபாய்களுக்கு இந்தியாவில் பாப்கார்ன் விற்பனை ஆகிறது. இதில் 75 சதவிகிதம் சினிமா தியேட்டர்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
தியேட்டரில் எப்படி பாப்கார்ன் முக்கிய இடம் பிடித்தது... யார் இதை அறிமுகம் செய்து வைத்தவர்கள்? இந்திய சினிமா தியேட்டர்களில் பாப்கார்ன் விற்க துவங்கியது அமெரிக்கப் பாதிப்பில்தான். 1929-ல் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியிருந்த அமெரிக்காவில், உணவின் விலை மிக அதிகமாக இருந்தது. ஆகவே, பசியைத் தாங்கிக்கொள்ள வீதியில் மலிவு விலையில் விற்கப்படும் பாப்கார்னை வாங்கி, தியேட்டருக்குள் கொண்டுபோய் ரகசியமாக சாப்பிட ஆரம்பித்தனர். வீதிகளில் தள்ளுவண்டியில் விற்கப்படும் பாப்கார்ன் விற்பனை அதிகமாகியது.
பொருளாதாரச் சரிவில் இருந்த தியேட்டர்கள் பார்வையாளர்களைத் திருப்திப்படுத்த பாப்கார்ன் விற்பனையை தியேட்டரினுள் அனுமதித்தன. குறைந்த விலையில் நிறைய பாப்கார்ன் கிடைக்கிறது என்பதால், மக்களும் பசியைப் போக்கியபடி சினிமா பார்க்கத் துவங்கினர். ஒருவகையில் இது ஒரு பஞ்ச காலத்து உணவுபோலத்தான் அறிமுகமானது. 1927-ம் வருடம் நியூயார்கின் ரோஸ் தியேட்டரில்தான் பாப்கார்னின் சினிமா பிரவேசம் அறிமுகமானது.
அதற்கு முன்பு வரை சினிமா தியேட்டர் என்பது உயர்குடியினர் வரும் இடம் என்பதால், அங்கே மலிவான உணவுப்பொருட்கள் விற்க அனுமதி வழங்கப்படவில்லை. இந்த மாற்றமே பாப்கார்ன் தியேட்டருக்குள் நுழைந்த கதை.
இதுபோலவே இரண்டாம் உலகப்போரின்போது சர்க்கரைக்கு ரேஷன் முறை கொண்டுவரப்பட்டது. ஆகவே, இனிப்பு மிட்டாய்கள் தயாரிப்பது குறைந்துபோனது. இந்தச் சந்தையைத் தனதாக்கிக் கொண்டது பாப்கார்ன். யுத்தகாலத்தில் அதன் விற்பனை ஆறு மடங்கு அதிகமானது.
பாப்கார்ன் எனப்படுவது ஒரு சோள ரகம். அதன் பூர்வீகம் மெக்சிகோ. அங்கு வாழ்ந்துவந்த அஸ்டெக் பழங்குடி மக்கள் மக்காச்சோளத்தை உணவாகக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். சோளக்கதிர்களை மாலையாகக் கட்டிக்கொண்டு ஆடுவதும் அவர்களது வழக்கம். ஸ்பானிய காலனிய மயமாக்கம் காரணமாக அஸ்டெக் பழங்குடியினர்கள் அழித்து ஒழிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்த உணவு முறைகளில் சில காலனிய நாடுகளுக்குப் பரவத் துவங்கின. அப்படிப் பரவியதுதான் மக்காச்சோளமும்.

No comments: