Feb 9, 2016

50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.22 ஆயிரத்து 450 கோடி கடன்: அம்மா அரசு சாதனை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தகவல்

வட்டியில்லா அம்மா சிறுவணிகக் கடன் திட்டத்தின் கீழ் சிறுவணிகர்களுக்கு இதுவரை ரூ.68.29 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார்.
கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக கடந்த 5 ஆண்டுகளில் 49,61,362 விவசாயிகளுக்கு ரூ.22,449.56 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 13,521 டன் காய்கறிகள் ரூ.40.18 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அம்மா மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் வாயிலாக ரூ.304.31 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தலைமையில் இன்று தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூட்ட அரங்கில், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதாவினால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் குறிப்பாக விவசாயிகள் பயனடையும் வகையில் கூட்டுறவுத்துறை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், கூட்டுறவுச் சங்கங்கள் நவீனமயமாக்கல் பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில், அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியதாவது:–
முதலமைச்சர் ஜெயலலிதா, ஏழை, எளிய மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத அத்தியாவசியப் பொருள்களை காலத்தே வழங்கும் தலையாய பணியை செவ்வனே மேற்கொண்டு வரும் கூட்டுறவுத்துறையினை மேம்படுத்தும் வகையிலும், சிறப்பான சேவையினை பொதுமக்களுக்கு வழங்குவதற்காகவும் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கூட்டுறவுத்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அண்மையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் செயல்படுத்தப்பட்டு வரும் வட்டியில்லா அம்மா சிறுவணிகக் கடன் திட்டத்தின் கீழ் அனைத்து சிறுவணிகர்களும் பயன்பெறும் வகையில் 13 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வியாபாரிகளின் இடத்திற்கே சென்று விண்ணப்பங்கள் வழங்கி, பரிசீலனை செய்து, கடனுதவிகள் வழங்கப்படும் வகையில் 7076 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 4,47,787 விண்ணப்பங்களை சிறு வணிகர்கள் பெற்றுள்ளனர். இதுவரை 1,36,586 சிறுவணிகர்களுக்கு தலா ரூ.5000 வீதம் வட்டியில்லா கடனாக ரூ.68.29 கோடி சிறுவணிகக் கடன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கடனுதவிகளை வழங்க வேண்டும்.
ரூ.22,450 கோடி விவசாய கடன்
முதலமைச்சரால் வேளாண் உற்பத்தியினை பெருக்கிடும் வகையில் 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை 49,61,362 விவசாயிகளுக்கு ரூ.22,449.56 கோடி பயிர்க்கடன் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக வரலாறு காணாத அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கு ரூ.5,500 கோடி வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 9,41,145 விவசாயிகளுக்கு ரூ.5,103.63 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. முழு குறியீட்டினையும் உடனடியாக எய்திட வேண்டும்.
முதலமைச்சர் அம்மா, 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை ரூ.154.62 கோடி நிதியுதவி வழங்கி, நலிவுற்ற கூட்டுறவு வங்கிகளுக்கு புத்துயிரூட்டி அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளார்கள். 43 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை நகர சங்கங்களாக தரம் உயர்த்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 4,571 தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு சரித்திர சாதனை படைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களின் 5,118 கிளைகளில் உட்சுற்று தொலைக்காட்சி நிறுவும் பணிகள் நடைபெற்று வருகிறது. 652 கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.34.44 கோடியில் பாதுகாப்பு கதவுடன் கூடிய பாதுகாப்பு அறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 176 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு பெட்டக வசதி பணிகள் நடைபெற்று வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகள் கணினிமயத்துடன் நவீனமயமாக்கப்பட்டு, அனைத்து வாடிக்கையாளர்களின் சேவையையே குறிக்கோளாகக்கொண்டு செயலாற்றி வருவதால், பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றதின் காரணமாக 2011ம் ஆண்டிலிருந்து இதுவரை கூட்டுறவு வங்கிகளின் வைப்புத் தொகை ரூ.26,247.43 கோடியிலிருந்து ரூ.49,184.63 கோடியாக உயர்ந்துள்ளது.
கூட்டுறவு நிறுவனங்கள் நவீயமாக்கப்படுவது மட்டுமன்றி, பணியாற்றும் பணியாளர்களின் நலன் கருதி கூட்டுறவு நியாய விலை கடைகளில் பணியாற்றும் 25,635 பணியாளர்களுக்கு ரூ.51.65 கோடி அளவுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடுத் திட்டத்தில் 38,023 பேர் இணைத்துள்ளனர். 342 பணியாளர்களின் மருத்துவ செலவினமாக ரூ.1.56 கோடி காப்பீடுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களும், வருவாய்த்துறை மற்றும் சமுக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை தங்களுக்கு அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பெற்றுக்கொள்ளும் வகையில் 4,415 சங்கங்களில் பொதுச் சேவை மையங்கள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இச்சேவை மையங்கள் வாயிலாக இதுவரை 43,95,339 சான்றிதழ்கள் பெற்று வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சங்கங்களுக்கு 17.19 கோடி நிகர வருமானம் கிடைக்கப்பெற்று உள்ளது.
ரூ.40 கோடி காய்கறி விற்பனை
வெளிச்சந்தையில் காய்கறி விலையினை கட்டுப்படுத்தும் வகையிலும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தரமான காய்கறிகளை குறைந்த விலையில் பெற்று பயன் பெறும் வகையிலும், இடைத்தரகரின்றி விவசாயிகளையும், நுகர்வோரையும் இணைக்கும் வகையில் முதலமைச்சர் அம்மாவின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் திட்டத்தின்கீழ், சென்னை மாநகரில் 2 நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடை உட்பட 72 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இக்கடைகள் வாயிலாக இதுவரை 13,521 மெ.டன் காய்கறிகள் ரூ.40.18 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அம்மாவின் தொலைநோக்குத் திட்டமான, அனைத்து தரப்பு மக்களும் 15 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் தரமான மருந்துகளை பெற்று பயனடையும் வகையிலான 106 அம்மா மருந்தகங்கள் மற்றும் 193 கூட்டுறவு மருந்தகங்கள் வாயிலாக இதுவரை ரூ.304.31 கோடி மதிப்பிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அம்மா மருந்தகங்களில் குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைப்பதால் மக்களிடையே இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, மக்களின் தேவைக்கேற்ப மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

No comments: