Mar 18, 2017

நடைபயிற்சி

‘நடைபயிற்சி மேற்கொள்வதால் உடல்ரீதியாக எத்தனையோ நன்மைகள் கிடைப்பதை நாம் அறிவோம். அதேபோல், மனதுக்கும் பல நன்மைகள் உண்டு என்பது தெரியுமா?’ என்கிறார் உளவியல் மருத்துவர் மோகன் வெங்கடாஜலபதி

நடப்பதை ஒரு பயிற்சியாக மட்டும் அல்ல... ஒரு தவமாகவே கருதுகின்றன புத்த மத சாஸ்திரங்கள். வாக்கிங் மெடிட்டேஷன்(Walking meditation) என்று புத்த மத நூல்கள் இதனை குறிப்பிடுகின்றன. எப்படி நடக்க வேண்டும் என்று யோசித்து இருக்கிறீர்களா?

இயற்கையோடு இணைந்து இருத்தலே ஒரு சுகமான அனுபவம். அதிலும் இயற்கையை ஒட்டிய அழகான பகுதிகளில் நடை பழகுவது என்பது நமது படைப்பாற்றலையும் தூண்டக்கூடியது.

பூமியில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் நிலத்தின் மீது அழுத்தமாக வைக்க வேண்டும். வேறு எதிலும் கவனம் சிதறக்கூடாது. அவசரம் கூடாது. சுற்றி நடக்கும் சம்பவங்கள், அலைபோல் எழும் சிந்தனைகள், நேற்றைய நினைவு எச்சங்கள், இன்றைய எதிர்பார்ப்புகள் இப்படி எதையுமே நினைக்கக் கூடாது.

மண்ணின் மீது படும் நமது பாதங்களை அதன் அழுத்தங்களை மட்டுமே கவனிக்க வேண்டும். ஒன்று, இரண்டு, மூன்று என்று நமது பாதம் அழுந்த அழுந்த மெல்ல எண்ண வேண்டும். ‘நான் தனி ஆள் இல்லை; இந்த பிரபஞ்சத்தில் ஒரு புள்ளி நான்’ என்பதோடு காலம் சென்ற நமது மகான்கள், முன்னோர்கள் இவர்களின் நல்லெண்ணங்கள் புதைந்துக்கிடக்கும் இந்த மண்ணில் மென்மையாக அடி பதிப்பதன் மூலம் அவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே இதை கருத வேண்டும்.

ஆழமாக மூச்சை இழுத்து, அவசரம் இல்லாமல் வெளியே விட்டுக்கொண்டே அமைதியாக நடக்க பழக வேண்டும். நமது முழு கவனமும் உள்ளே/வெளியே இழுக்கும் மூச்சில் மட்டுமே இருக்க வேண்டும். மன அழுத்தம் குறைவதற்கும் நம்மை புத்தாக்கம் செய்துகொள்வதற்கும்தான் இந்த நடை தியானம். அதனால், முடிந்தவரைத் யாரையும் அழைத்துச் செல்லக்கூடாது. குறிப்பாக, அன்றாடப் பிரச்னைகள் எதையும் நினைக்கக் கூடாது.

இதை ஒரு சக்தி சேகரிப்பு நிகழ்வாகக் கருதி ஒவ்வொரு நாளும் 20 நிமிடங்களாவது உங்களுக்கான ஏகாந்த தனிமையில், இயற்கை எழில் நிரம்பிய சூழலில் நடந்து பழகுங்கள். கம்பீரமாக நிற்கும் மலைகளைப் பாருங்கள். பூத்துக்குலுங்கும் மலர்களைப் பாருங்கள். ‘கிரீச்... கிரீச்...’ எனும் பெயர் தெரியாத பறவைகளின் ஒலிக்கவிதைகளைக் கேளுங்கள்.

எத்தனைத் தலைமுறைகளை கடந்து வந்து என்னை யார் என்ன செய்துவிட முடியும் என்று சொல்லாமல் சொல்லும் மலைகளின் கம்பீரத்துக்கு முன்பு நாம் எம்மாத்திரம்?.சற்றே அண்ணாந்து அகண்டிருக்கும் நீல வானத்தைப் பாருங்கள். கடந்த ஒரு மாதத்தில் வானத்தை நோக்கி நிதானமாகப் எத்தனை முறை பார்த்திருப்பீர்கள் என்பதையும் யோசியுங்கள்.

நாம் என்னும் அகங்காரம் நம்மை விட்டு அகலும் அற்புதமான தருணங்களை அந்த காலை நேர நடையில் நீங்கள் உணர்வீர்கள். இதை எல்லாம் விடுத்து, கிளம்பும்போதே ஒரு தோழர்கள் படையுடன், அரசியலில் ஆரம்பித்து ரியல் எஸ்டேட் வரை உலகின் எல்லா பிரச்னைகளையும் பேசிக்கொண்டு நடப்பது நல்லதில்லை. அந்த நேரத்திலும் சும்மா இருக்காமல் காதில் வயர்போனை சொருகிக்கொண்டு ‘காச்மூச்?’ என்கிற சப்தங்களை கேட்டு மீண்டும் மனதை டென்ஷனிலேயே வைத்திருக்க வேண்டாம்.

மருத்துவரும் தத்துவ அறிஞருமான ஹிப்போக்ரடீஸ்  சொல்கிறார், ‘நடப்பது என்பது சிறந்த மருந்து.’ கம்ப்யூட்டர் ஜாம்பவானும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவருமாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ஒரு சுவாரஸ்யமான பழக்கம் உண்டு. முக்கிய கூட்டங்களில் பேசும் முன் அல்லது முக்கிய முடிவுகள் எடுக்கும்போது தானும் நடப்பார்; தன்னுடன் ஆட்களை அழைத்துக்கொண்டு நடந்த வண்ணமே விவாதமும் செய்வார்.

பல படைப்பாளிகளை கேட்டால் அவர்களுக்கு சிறந்த ஐடியாக்கள் பிறந்த நேரம் நடைபயிற்சியின்போது என்று சொல்கிறார்கள். இன்னும் சொல்லப்
போனால் படைப்பாற்றல் மிக்க சிந்தனையாளர்கள் பலரும் நடைபயிற்சி செல்வதை தினசரி வாடிக்கையாகக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.தத்துவ ஞானியான அரிஸ்டாட்டில் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்துக்கொண்டிருந்தார்.

நகரத்துக்கு வெளியே ஒரு உடற்பயிற்சி கூடத்தில் சொந்தமாக பள்ளி ஒன்றை அங்கே அவர் நடத்தி வந்தார். ஏராளமான புத்தகங்களை அங்கு வைத்திருந்ததுடன், தன்னைச் சுற்றிலும் ஏராளமான சிஷ்யப் பிள்ளைகளையும் அவர் வைத்திருந்தார். அதில் கல்வி
பயிலும் முறை எப்படித் தெரியுமா? நடந்துகொண்டேதான். நடந்துகொண்டே தத்துவம் கற்பிப்பார். நடந்துகொண்டே மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களை தீர்ப்பார். இதனை ஆங்கிலத்தில் Peripatetic என்பார்கள்.

எதையும் சிந்திக்காமல் அந்த நேரத்தில், அந்தப் பொழுதில் நம்மை நாம் பரிபூரணமாக ஆட்படுத்திக்கொள்வதைத் தான் ‘Mind fullness’ என்கிறது உளவியல். இப்படி நடைபயிற்சியில் மட்டும் அல்ல... ஒவ்வொரு செயலிலும் மனப்பூர்வமான முழு ஈடுபாட்டை செலுத்தும்போது மனநோய்கள் நம் அருகில் நெருங்க முடியாது. மன அழுத்தம் என்கிற சொல்லுக்கே உங்கள் அகராதியில் இடம் இருக்காது.

நன்றி குங்குமம் டாக்டர் 

2 comments:

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான அரிய தகவல்கள்
உள்ளடக்கிய பகிர்வினைத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...


நடப்பது மனதிற்கு மட்டுமல்ல உடலுக்கும் நல்லது சிறு வயது முதல் கல்லூரி வரை அதிகம் நடக்க வாய்ப்புக்கள் கிடைத்தன அதன் பின் வாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்தன ஆனால நாயுகுட்டி ஒன்று வாங்கிய பின் மீண்டு நடைப்பழக்கம் அதிகரித்து உள்ளது